கடலூரில் நள்ளிரவில் பரபரப்பு: ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் மீது கல்வீச்சு - 6 பேர் கைது


கடலூரில் நள்ளிரவில் பரபரப்பு: ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் மீது கல்வீச்சு - 6 பேர் கைது
x
தினத்தந்தி 23 Oct 2020 1:05 PM GMT (Updated: 23 Oct 2020 1:05 PM GMT)

கடலூரில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் மீது கல்வீசி தாக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். நள்ளிரவில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் குறித்த விவரம் வருமாறு.

கடலூர்,

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்களாக பணிபுரிந்து வருபவர்கள் ரவிச்சந்திரன், கணபதி, ஜெயக்குமார், ராமமூர்த்தி. இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவு கடலூர் பஸ் நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஸ் நிலையத்தில் உள்ள ஒரு பயணியிடம், வாலிபர்கள் சிலர் செல்போனை பறிக்க முயற்சிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே போலீஸ்காரர்கள் 4 பேரும், பஸ் நிலையத்திற்குள் சென்றனர். அப்போது அங்கு வாலிபர்கள் சிலர் குடிபோதையில் நின்று கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீசார், அவர்களை திட்டி, வீட்டுக்கு செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் வீட்டுக்கு செல்லாமல், பஸ் நிலையத்திற்குள்ளேயே பதுங்கி இருந்ததாக தெரிகிறது. மேலும் அவர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் போலீசார் அனைவரும் ஹெல்மெட் அணிந்திருந்ததால் லேசான காயமடைந்தனர். பின்னர் சுதாரித்துக் கொண்ட போலீசார், வாலிபர்கள் 6 பேரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருப்பாதிரிப்புலியூர் இந்திரா நகரை சேர்ந்த சந்துரு (வயது 21), உதயா(20), மாதேஷ்(21), சுப்புராயலு நகரை சேர்ந்த ராஜேஷ்(20), ஆனந்தராஜ்(20), ராஜி(21) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்துரு, உதயா உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்தனர். நள்ளிரவில் போலீசார் மீது வாலிபர்கள் கல்வீசி தாக்கிய சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story