கோவை அருகே, போக்குவரத்து சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ‘ரெய்டு’ - இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் மீது வழக்கு


கோவை அருகே, போக்குவரத்து சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ‘ரெய்டு’ - இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 24 Oct 2020 11:45 AM IST (Updated: 24 Oct 2020 11:43 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே கே.ஜி.சாவடியில் உள்ள வட்டார போக்குவரத்து சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.91 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

போத்தனூர்,

கோவை அருகே கே.ஜி.சாவடியில் வட்டார போக்குவரத்து சோதனை சாவடி உள்ளது. இங்கு தான் கேரளாவுக்கு செல்லும் வாகனங்களுக்கும், கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களுக்கும் அனுமதி வாங்க வேண்டும். இந்த சோதனை சாவடியில் வாகன போக்குவரத்து இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 10-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். எனவே இந்த சோதனை சாவடி வழியாக வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனை செய்யப்படுகிறது. மேலும் வாகனங்கள் முறையாக ஆவணங்களுடன் இயக்கப்படுகிறதா?, சட்டவிரோதமாக பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. அப்போது முறையாக ஆவணங்கள் இன்றி வரும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த நிலையில் கே.ஜி. சோதனை சாவடி வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு முறையாக சோதனை செய்யாமல் விட்டு விடுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் நேற்று காலை 5.30 மணியளவில் அந்த சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமையில் போலீசார் திடீரென்று சோதனை நடத்தினர்.

அவர்கள் அங்கு கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் ஏதும் பதுக்கப்பட்டு உள்ளதா? என்பது தீவிரமாக சோதனை நடத்தினர். மேலும் அங்கு பணியில் இருந்த வாகன போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களிடம் இருந்து ரூ.91 ஆயிரம் கைபற்றப்பட்டது. அந்த பணத்துக்கு அவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லை. பணம் குறித்து கேட்ட போது அவர்கள் முறையான பதில் அளிக்க வில்லை என்று தெரிகிறது. எனவே அது கணக்கில் வராத பணம் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து வாகன போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரோஜா, சப்-இன்ஸ்பெக்டர் அருள், அலுவலக ஊழியர், புரோக்கர் சரவணன் ஆகிய 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கே.ஜி.சாவடி சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி ரூ.91 ஆயிரத்தை பறிமுதல் செய்து, 4 பேர் மீது வழக்கு பதிவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் சார்- பதிவாளர் அலுவலகம் மற்றும் கோவை வடக்கு தாலுகா அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Next Story