கர்நாடகத்தில் காலியாக உள்ள 5,800 கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும்


கர்நாடகத்தில் காலியாக உள்ள 5,800 கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும்
x
தினத்தந்தி 25 Oct 2020 12:45 AM GMT (Updated: 25 Oct 2020 12:45 AM GMT)

கர்நாடகத்தில் காலியாக உள்ள 5,800 கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு, ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் காலியாக உள்ள 5,800 கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.சி.கொண்டய்யா மற்றும் சிலர் பொதுநல மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் மீதான விசாரணை தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல் கஜேந்திரா, கிராம பஞ்சாயத்து தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராக இருக்கிறது. இதுதொடர்பாக அரசுடன் கடந்த ஜூன் மாதமே ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக கிராம பஞ்சாயத்து தேர்தலை தள்ளிவைக்க மாநில அரசு தான் வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எந்த விதிமுறையையும் மீறவில்லை என்று வாதிட்டார்.

கொரோனா பரவலை...

அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் வாதாடும் போது, ‘கிராம பஞ்சாயத்து தேர்தல் அரசியல் காரணங்களால் நடத்தப்படாமல் இல்லை. மாநிலத்தில் கொரோனா பரவல் இருப்பதால் கிராம பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிப்போகிறது. கிராம பஞ்சாயத்து தேர்தலை நடத்த அரசும் ஆர்வமாக தான் இருக்கிறது‘ என்று கூறினார்.

அப்போது தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா குறுக்கிட்டு, ’கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் சந்தர்ப்பத்தில், அதனை மாநில அரசு திறம்பட கையாண்டது. தற்போது பீகாரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. மாநிலத்தில் 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் கொரோனா பரவலை காரணம் காட்டி கிராம பஞ்சாயத்து தேர்தலை தள்ளிப்போடுவது சரியானது அல்ல, ’ என்று கூறினார்.

நடவடிக்கை எடுங்கள்

மேலும் அவர் கூறும் போது, கிராம பஞ்சாயத்து தேர்தல் நடத்தாததால், நியமன அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் பணிக்காலம் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடைகிறது. அதன்பிறகு, நியமன அதிகாரிகளின் நியமனம் நீட்டிக்க கூடாது என்றும் தெரிவித்தார். அத்துடன் கிராம பஞ்சாயத்து தேர்தலை நடத்தும் விவகாரத்தில் அரசு மற்றும் மனுதாரர்கள் வருகிற 29-ந் தேதிக்குள் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஏ.எஸ்.ஓகா உத்தரவிட்டார்.

அதே நேரத்தில் கர்நாடகத்தில் காலியாக உள்ள 5,800 கிராம பஞ்சாயத்துகளுக்கும் தேர்தல் நடத்த உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 29-ந் தேதிக்கு அவர் ஒத்திவைத்துள்ளார்.

Next Story