ஈரோட்டில் விற்பனைக்கு குவிந்த ஆயுத பூஜை பொருட்கள்


ஈரோட்டில் விற்பனைக்கு குவிந்த ஆயுத பூஜை பொருட்கள்
x
தினத்தந்தி 25 Oct 2020 4:43 AM GMT (Updated: 25 Oct 2020 4:43 AM GMT)

ஈரோட்டில் ஆயுத பூஜைக்கான பொருட்கள் விற்பனைக்கு குவிந்தன.

ஈரோடு, 

நாடு முழுவதும் ஆயுத பூஜை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று ஈரோடு மாநகர் பகுதியில் அனைத்து பகுதிகளிலும் பூஜைக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டன.

வீடுகள், அலுவலகங்கள், தொழிற்கூடங்கள், தொழிற்சாலைகளில் அலங்கார தோரணம் கட்டும் வண்ண காகிதங்கள், மாவிலை, வாழைக்கன்று மற்றும் பூமாலைகள் குவிக்கப்பட்டு இருந்தன. ஈரோடு கடை வீதி, சுவஸ்திக் கார்னர், காளைமாட்டு சிலை.

கொல்லம்பாளையம், மூலப்பாளையம், வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம், திண்டல், செங்கோடம்பாளையம் பிரிவு, சூரம்பட்டி என்று அனைத்து பகுதிகளிலும் தற்காலிக பூக்கடைகள், வாழைக்கன்று மற்றும் மாவிலை கடைகள் தொடங்கப்பட்டு உள்ளன.

இதுபோல் வெள்ளை பூசணி, பொரி, அவல் உள்ளிட்ட பூஜை பொருட்கள், கோலங்கள் இடுவதற்கான வண்ணப்பொடிகளும் விற்பனை செய்யப்பட்டன.

சுத்தம் செய்யும் பணி

வீடுகள், நிறுவனங்கள் அனைத்தும் நேற்று முழுமையாக சுத்தம் செய்யப்பட்டன. பல தொழிற்கூடங்களில் வெள்ளை அடித்து புதுப்பிக்கும் பணிகள் நடந்தது. அனைத்து எந்திர தளவாடங்களும் சுத்தம் செய்யப்பட்டு பூஜைக்கு தயார் செய்யப்பட்டன. தொழிலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தயாராக எடுத்து வைக்கப்பட்டன.வீடுகளில் சாணம் பூசி சுத்தம் செய்யும் பணியில் பலரும் ஈடுபட்டனர். ஆயுதபூஜை இன்று (ஞாயிற்றுக்கிழமை) என்றாலும் இன்றைய தினம் விடுமுறை என்பதால் பல நிறுவனங்களிலும் நேற்று மாலை பூஜை போடப்பட்டது. இதனால் ஒரு நாள் முன்னதாகவே ஆயுதபூஜை களை கட்ட தொடங்கியது.

Next Story