அதிகபட்சமாக 10 முதல் 39 வயதுடைய 3,669 பேருக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்


அதிகபட்சமாக 10 முதல் 39 வயதுடைய 3,669 பேருக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 25 Oct 2020 3:00 PM IST (Updated: 25 Oct 2020 2:48 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக 10 வயது முதல் 39 வயதுடைய 3,669 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 8,518 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது இதன் தாக்கம் குறைந்து வந்தாலும், இந்த நோய் முதியவர்களை எளிதில் தாக்குவதாக கருத்து நிலவி வருகிறது. ஆனால் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 20-ந் தேதி நிலவரப்படி 10 வயது முதல் 39 வயதுடைய நபர்களே அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த 20-ந் தேதி நிலவரப்படி மாவட்டத்தில் வயது வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் விவரத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்டு உள்ளனர். அதன்படி 1 வயது குழந்தைகள் 17 பேரும், 2 வயது முதல் 5 வயது வரை 35 பேரும், 6 முதல் 9 வயது வரை 66 பேரும், 10 முதல் 39 வயது வரை 3,669 பேரும், 40 முதல் 59 வயது வரை 3,041 பேரும், 60 வயது முதல் 85 வயது வரை 1,434 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 5 ஆயிரத்து 81 பேர் ஆண்கள். 3 ஆயிரத்து 181 பேர் பெண்கள் ஆவர்.

இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 91 பேர் இறந்து உள்ளனர். இவர்களில் 2 பேர் மட்டுமே 39 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள். 34 பேர், 40 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்கள். 60 வயதுக்கு மேற்பட்டோர் மட்டும் 55 பேர் கொரோனாவுக்கு இறந்து உள்ளனர். கொரோனா வைரஸ் வயது வித்தியாசம் இன்றி அனைத்து தரப்பினரையும் தாக்கி வருவதால், பண்டிகை காலங்களில் பொதுமக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து கொரோனா பரவாமல் தடுக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Next Story