சேலத்தில், காதலனுடன் சேர்த்து வைக்க கோரி போலீஸ் நிலையத்தில் பெண் தர்ணா


சேலத்தில், காதலனுடன் சேர்த்து வைக்க கோரி போலீஸ் நிலையத்தில் பெண் தர்ணா
x
தினத்தந்தி 27 Oct 2020 12:04 AM GMT (Updated: 2020-10-27T05:34:26+05:30)

சேலத்தில் காதலனுடன் சேர்த்து வைக்க கோரி போலீஸ் நிலையத்தில் பெண் தர்ணாவில் ஈடுபட்டார். ஆனால் காதலனுக்கு நேற்று வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம், 

சேலம் மரவனேரி கோர்ட்டு ரோடு பிள்ளையார் நகரை சேர்ந்தவர் மணி. இவருடைய மகள் இந்துபிரியா (வயது 30). இவர் நேற்று முன்தினம் இரவு தனது உறவினர்களுடன் அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் அங்கு அவர், தன்னை காதலனுடன் சேர்த்து வைக்க கோரி திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், இந்து பிரியா சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவருக்கும் கடைக்கு வந்து சென்ற செட்டிச்சாவடி பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து பல்வேறு இடங்களில் சுற்றிள்ளனர்.

காதலன் மீது வழக்கு

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரும் பேசாமல் இருந்து வந்தனர். இதனிடையே கலைச்செல்வனுக்கும், ஓமலூரை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக இந்து பிரியாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் கலைச்செல்வனிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் இந்து பிரியாவை திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து காதலித்து ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில், கலைச்செல்வன் மீது திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேறொரு பெண்ணுடன் திருமணம்

இதனிடையே கலைச்செல்வனுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் நிச்சயித்தப்படி நேற்று கருப்பூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story