ராமேசுவரம் கோவில் முன்பு சூரசம்ஹாரம் நடந்தது சுவாமி, அம்பாள் அம்பு எய்தனர்


ராமேசுவரம் கோவில் முன்பு சூரசம்ஹாரம் நடந்தது சுவாமி, அம்பாள் அம்பு எய்தனர்
x
தினத்தந்தி 27 Oct 2020 6:48 AM IST (Updated: 27 Oct 2020 6:48 AM IST)
t-max-icont-min-icon

நவராத்திரி திருவிழாவையொட்டி ராமேசுவரம் கோவில் முன்பு நேற்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. சுவாமி, அம்பாள் அம்பு எய்தனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் கோவிலில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 16-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் பர்வதவர்த்தினி அம்பாள் பல்வேறு அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக நேற்று மாலை 5 மணி அளவில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கோவிலின் கிழக்கு வாசல் பகுதிக்கு எழுந்தருளினர்.

அம்பு எய்தனர்

தொடர்ந்து சுவாமி-அம்பாள் 4 முறை அம்பு எய்து, சூரசம்ஹாரம் நடந்தது. இதை தொடர்ந்து சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை, பூஜைகள் நடைபெற்று, 3-ம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் ஜோசியர் உதயகுமார், கொடுக்கல் சிவமணி, உதவி ஆணையர் ஜெயா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வழக்கமாக நவராத்திரி திருவிழாவில் சூரசம்ஹாரத்துக்காக அம்பு எய்தல் நிகழ்ச்சி பத்திரகாளி அம்மன் கோவில் அருகே உள்ள மகர நோன்பு திடலில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Next Story