விஜயதசமி தினத்தையொட்டி பள்ளிகளில் குழந்தைகள் சேர்ப்பு ‘அ’ எழுதி கல்வியை தொடங்கினர்


விஜயதசமி தினத்தையொட்டி பள்ளிகளில் குழந்தைகள் சேர்ப்பு ‘அ’ எழுதி கல்வியை தொடங்கினர்
x
தினத்தந்தி 27 Oct 2020 3:08 AM GMT (Updated: 27 Oct 2020 3:08 AM GMT)

விஜயதசமி தினத்தையொட்டி பள்ளிகளில் பெற்றோர் ஆர்வத்துடன் குழந்தைகளை சேர்த்தனர். அப்போது தமிழ் உயிர் எழுத்தான ‘அ’ எழுதி கல்வியை தொடங்கினர்.

திண்டுக்கல், 

நவராத்திரி விழா நிறைவுபெற்ற அடுத்த நாள் விஜயதசமி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினம் வெற்றிக்குரிய நாளாக கருதப்படுகிறது. இந்த விஜயதசமி தினத்தில் தொடங்கப்படும் காரியம் நிச்சயம் வெற்றியை தரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. எனவே, குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதில் பெற்றோர் ஆர்வம் காட்டுவார்கள். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று விஜயதசமியையொட்டி பெற்றோர் தங்களுடைய குழந்தைகளை பள்ளியில் சேர்த்தனர்.

இதையொட்டி அரசு மற்றும் தனியார் தொடக்கப்பள்ளிகளில் விஜயதசமி தின சேர்க்கைக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. எனவே, பெற்றோருடன் தங்களுடைய குழந்தைகளுக்கு புத்தாடை அணிவித்து காலையிலேயே கோவிலுக்கு அழைத்து சென்று தரிசனம் செய்தனர். அதன்பின்னர் பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளை ஆர்வத்துடன் சேர்த்தனர்.

குழந்தைகள் சேர்க்கை

இதில் ஒருசில பள்ளிகளில் விஜயதசமி தின வழிபாடு நடத்தப்பட்டு, பின்னர் குழந்தைகள் சேர்க்கை நடைபெற்றது. இதையடுத்து குழந்தைகளை, ஆசிரியர்கள் தங்களுடைய மடியில் அமரவைத்து அரிசி அல்லது நெல்லில் விரலை பிடித்து எழுத வைக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் குழந்தைகள் தமிழ் உயிர்எழுத்தான ‘அ’-வை எழுதி கல்வியை தொடங்கினர். ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளில் கூட தமிழில் எழுத வைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் குழந்தைகளுக்கு ஆர்வமூட்டும் வகையில் நோட்டுபுத்தகம், பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்களும் வழங்கப்பட்டன. இதேபோல் பழனி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் விஜயதசமி வழிபாடு, வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. இதில் நெல், அரிசியில் குழந்தைகளை எழுத வைத்ததோடு, குழந்தைகளின் நாக்கில் நெல்மணியாமல் எழுத்து எழுதப்பட்டது. 

Next Story