ராணிப்பேட்டையில் ரூ.118.4 கோடியில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டு விழா - காணொலி காட்சி மூலம் முதல் -அமைச்சர் தொடங்கி வைத்தார்
ராணிப்பேட்டையில் ரூ.118.4 கோடியில் புதிய கலெக்டர் அலுவலகம், பிற அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சிப்காட்(ராணிப்பேட்டை),
வேலூர் மாவட்டத்தை நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக 3 ஆக பிரிக்கும் அறிவிப்பை கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ந்தேதி ராணிப்பேட்டையை தலைநகராக கொண்டு புதிய மாவட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் கலெக்டராக எஸ்.திவ்யதர்ஷினி பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். தற்காலிக கலெக்டர் அலுவலகம் ராணிப்பேட்டை கெல்லீஸ் சாலையில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி மைய வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் மற்றும் பிற அலுவலகங்கள் கட்டுவதற்காக, சென்னை-சித்தூர் சாலையில் (எம்.பி.டி. ரோடு) உள்ள ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு நிலைய வளாகம் (ஐ.வி.பி.எம்) தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த இடத்தில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் பிற அலுவலகங்கள் கட்டுவதற்காக ரூ.118.4 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.
புதிய கலெக்டர் அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று காணொலி காட்சி மூலமாக ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் மற்றும் பிற அலுவலகங்கள் கட்டும் பணிகளுக்காக அடிக்கல் நாட்டி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.
அதற்காக ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ., தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் முகமது ஜான் எம்.பி., சம்பத் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கரலிங்கம், ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத், பொதுமக்கள் சார்பாக அரக்கோணம் எத்திராஜ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story