வறட்சியினால் மக்காச்சோளம் பாதிப்பு: விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்


வறட்சியினால் மக்காச்சோளம் பாதிப்பு: விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 29 Oct 2020 12:00 PM GMT (Updated: 2020-10-29T17:23:53+05:30)

வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளத்தை பயிர் செய்ய விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என முத்தரசன் கூறினார்.

ராஜபாளையம்,

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ராமசாமி எழுதிய “எனது அரசியல் பயணம்“ என்ற நூல் வெளியீட்டு விழா ராஜபாளையத்தில் நடைபெற்றது. இதில் அக் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மத்திய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன், தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் எம்.பி. லிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முத்தரசன் புத்தகத்தை வெளியிட முதல் பிரதியை மகேந்திரன் பெற்றுக் கொண்டார்.

விழாவிற்கு பிறகு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக செயல்பட்டு கொண்டிருக்கிறது. மருத்துவ படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுத்தர மறுப்பதோடு, அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதையும கவர்னர் தொடர்ந்து காலதாமதம் செய்து வருகிறார்.

இதனை வன்மையாக கண்டிக்கிறோம். திருமாவளவன், மனு நூலில் சொல்லப்பட்ட செய்தியை தான் சொன்னாரே தவிர, அவரது சொந்த கருத்தாக கூறவில்லை. ஆனால் இதை பா.ஜ.க. தவறாக சித்தரித்து தமிழகமெங்கும் மிக மோசமான வன்முறை தோன்ற கூடிய வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை கண்டிக்கிறோம்.

பல்வேறு மாவட்டங்களில் கடுமையான வறட்சி நிலவிய காரணத்தினால் மக்காச்சோளம் பயிரிட்டு விதைத்து, அனைத்தும் நாசமாகி விட்டது. வட கிழக்கு பருவ மழை காலதாமதமாக தொடங்கி இருக்கிறது. ஆகவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் உரிய நிவாரணம் வழங்குவதோடு, அவர்களுக்கு மீண்டும் விதைகளை வழங்கி இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் பயிர் செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

சிவகாசி பட்டாசினை தடையில்லாமல் விற்க உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story