நெகமம் அருகே, தொழிலாளி தற்கொலை வழக்கில் வாலிபர் கைது
நெகமம் அருகே, தொழிலாளி தற்கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நெகமம்,
கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள ஜக்கார்பாளையத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். தொழிலாளி. இவருக்கு மீனா என்கிற மனைவியும், சுஜித் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக சிலம்பரசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து நெகமம் போலீசார் அவரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதற்கிடையில் சிலம்பரசன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, உறவினர்கள் சிலம்பரசன் உடலை வாங்க மறுத்து அரசு ஆஸ்பத்திரி முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொள்ளாச்சி துணை சூப்பிரண்டு சிவக்குமார், இன்ஸ்பெக்டர்கள் வெற்றிவேல்ராஜன், புகழேந்தி ஆகியோர் சிலம்பரசனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதை தொடர்ந்து போலீசார், சிலம்பரசனின் மனைவி மீனா, அந்த பகுதியை சேர்ந்த டிரைவர் அருண்குமார் (27) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில் அருண்குமார் கடந்த சில நாட்களாக மீனாவுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த சிலம்பரசன் இருவரையும் அழைத்து கண்டித்து உள்ளார். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து பழகி வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் சம்பவத்தன்று மீனா, அருண்குமார் இருவரும் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனவிரக்தி அடைந்த சிலம்பரசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து போலீசார் அருண்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story