இளம்பெண்களை செல்போனில் படம் பிடித்து சர்ச்சையில் சிக்கியவர் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ரவீந்திரநாத் திடீர் ராஜினாமா


இளம்பெண்களை செல்போனில் படம் பிடித்து சர்ச்சையில் சிக்கியவர் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ரவீந்திரநாத் திடீர் ராஜினாமா
x
தினத்தந்தி 29 Oct 2020 11:30 PM GMT (Updated: 29 Oct 2020 6:45 PM GMT)

6 ஆண்டுகளுக்கு முன் இளம்பெண்களை செல்போனில் படம் பிடித்து சர்ச்சையில் சிக்கிய கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ரவீந்திரநாத் திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது முடிவுக்கு சில அதிகாரிகளின் தொல்லை காரணம் என்று அவர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்து வந்தவர் ரவீந்திரநாத். இவர், தற்போது கர்நாடக வனத்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், தனது பதவியை நேற்று முன்தினம் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியான ரவீந்திரநாத் திடீரென்று ராஜினாமா செய்துள்ளார்.

இதுதொடர்பாக கர்நாடக மாநில தலைமை செயலாளர் விஜய பாஸ்கர் மற்றும் கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் ஆகியோருக்கு தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது தொடர்பான கடிதத்தை ரவீந்திரநாத் அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

ஐ.பி.எஸ். அதிகாரியாக கர்நாடக மக்களுக்கு சிறப்பான சேவை ஆற்றியுள்ளேன். எனது பணி காலத்தில் எந்த இடத்திற்கு மாறுதல் செய்யப்பட்டு இருந்தாலும், அரசின் உத்தரவை மதித்து நடந்துள்ளேன். ஆனால் எனது பணி காலத்தில் கடந்த 4 ஆண்டுகளாக போலீஸ் துறையில் பல்வேறு பிரச்சினைகள், தொல்லைகளை அனுபவித்து வருகிறேன். இந்த பிரச்சினைகள் சிலரால் உருவாக்கப்பட்டதாகும்.

சிலர் எனக்கு மறைமுகமாக துன்புறுத்தல்களை கொடுத்து வருகிறார்கள். நான், என்னுடைய குடும்பத்தினருடன் அமைதியான வாழ்க்கை வாழ விரும்புகிறேன். எனவே என்னுடைய ராஜினாமாவை அங்கீகரிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ரவீந்திரநாத்திற்கு, சில மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் தொல்லை கொடுத்ததாகவும், அதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியான ரவீந்திரநாத்திற்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த சுனில்குமார், ஏ.எம்.பிரசாத் பணியில் இருந்து ஓய்வு பெறுவதால், அவர்கள் டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு செய்து நேற்று முன்தினம் கர்நாடக அரசு உத்தரவிட்டு இருந்தது.

ஆனால் ரவீந்திரநாத்திற்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதுவும் அவரது ராஜினாமாவுக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியான ரவீந்திரநாத் சில வழக்குகளில் சிக்கி இருந்தார். அதுதொடர்பாக துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்ததாக உள்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி ரவீந்திரநாத் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் கர்நாடக ஆயுதப்படை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக பணியாற்றிய போது பெங்களூரு கண்ணிங்காம் ரோட்டில் உள்ள காபி ஷாப்புக்கு சீருடை அணியாமல் சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த 2 இளம்பெண்களை தனது செல்போனில் ரவீந்திரநாத் படம் பிடித்ததாக சர்ச்சையில் சிக்கி இருந்தார். இதுதொடர்பாக அவர் மீது ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் இளம்பெண்களை செல்போனில் படம் பிடித்த சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

தற்போது மூத்த அதிகாரிகள் தொல்லை, பதவி உயர்வு கிடைக்காது உள்ளிட்ட காரணங்களால் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த ரவீந்திரநாத் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது கர்நாடக போலீஸ் துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story