7.5 சதவீத இடஒதுக்கீட்டில் முடிவெடுக்கவில்லை என்றால் காங்கிரஸ் கட்சி சார்பில் கவர்னர் மாளிகை முற்றுகையிடப்படும் - திருவண்ணாமலையில் கே.எஸ்.அழகிரி பேட்டி


7.5 சதவீத இடஒதுக்கீட்டில் முடிவெடுக்கவில்லை என்றால் காங்கிரஸ் கட்சி சார்பில் கவர்னர் மாளிகை முற்றுகையிடப்படும் - திருவண்ணாமலையில் கே.எஸ்.அழகிரி பேட்டி
x
தினத்தந்தி 30 Oct 2020 10:30 AM GMT (Updated: 30 Oct 2020 10:25 AM GMT)

மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் முடிவெடுக்கவில்லை என்றால் காங்கிரஸ் கட்சி சார்பில் கவர்னர் மாளிகை முற்றுகையிடப்படும் என திருவண்ணாமலையில் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட தலைவர் செங்கம் ஜி.குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செந்தமிழ்அரசு, மோகன், நாகராஜன், வேலூர் மாவட்ட தலைவர் டீக்காராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதில் ஊடக பிரிவு மாநில பொதுச்செயலாளர் காமராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் அந்த சட்டமன்ற தீர்மானத்திற்கு கவர்னர் இதுவரை கையெழுத்திடாமல் இருக்கிறார். ஒன்று அவர் கையெழுத்திட வேண்டும் அல்லது திரும்ப அனுப்ப வேண்டும். இரண்டையும் அவர் செய்யாமல் இருக்கிறார். இது தவறான முன்னுதாரணம். கடந்த ஆண்டு மருத்துவ இடங்களில் 4 அரசு பள்ளி மாணவர்களுக்கு தான் இடம் கிடைத்தது. தமிழகத்தில் உள்ள எண்ணிக்கையை பார்க்கிற போது 4 மாணவர்கள் தான் அரசு பள்ளியில் இருந்து வருகிறார்கள் என்று சொன்னால் இதைவிட ஒரு கீழ்நிலை இருக்க முடியாது.

புதுச்சேரி அரசு புதுவை மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி இருக்கிறது. இதை அவர்கள் சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பவில்லை மாறாக அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்றால் ஒரு அரசாணையாக பிறப்பித்திருக்கிறார்கள். எனவே அதற்கு கவர்னரால் தடை விதிக்க முடியவில்லை.

தமிழக முதல்-அமைச்சர் அப்படி செய்திருக்கலாம். ஆனால் அவர்களுக்கு எதையும் ஆக்கப்பூர்வமாக செய்கின்ற மனநிலை இல்லை. இதனால் இந்த சூழல் வந்திருக்கிறது. எனவே இது தமிழக மாணவர்களுக்கு ஒரு இக்கட்டான சூழல். இந்த சூழலை களைய வேண்டியது கவர்னர் பொறுப்பு. இதில் அதிவேக முன்னேற்றத்தை காண வேண்டியது முதல்-அமைச்சரின் பொறுப்பு. இருவருமே மவுனமாக இருப்பது ஆபத்தான அறிகுறி. இதனால் மாணவர்களின் முன்னேற்றம் தடைபடும். உடனடியாக முதல்-அமைச்சரும், கவர்னரும் முடிவெடுக்கவில்லை என்றால் தமிழக காங்கிரசின் சார்பாக போராட்டங்கள் நடைபெறும். குறிப்பாக கவர்னர் மாளிகையை முற்றுகை இடுவதற்கு தமிழக காங்கிரஸ் முடிவெடுக்கும்.

கொரோனா விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு எதுவும் செய்யவில்லை. மத்திய அரசு இந்த பிரச்சினையை கைவிட்டு மாநில அரசிடம் தள்ளிவிட்டது. தற்போதைய நிலை என்பது உயிர் பிழைப்பவர்கள் பிழைத்துக் கொள்ளட்டும் என்பது தான் அரசின் நிலை. மாநில அரசின் கொரோனா தடுப்பு முறை வெற்றிகரமானது இல்லை என்பது உறுதியாக உள்ளது. எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் நியமனத்தின் மூலம் மோடி அரசின் நிலையை அறியலாம்.

அரியர் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு கண்ணிருந்தும் குருடராய், வாயிருந்தும் ஊமையாய், காது இருந்தும் செவிடனாய் இருக்கக்கூடிய ஒரு புதுவிதமான உயிரினம். எதைப் பற்றியும் அவர்கள் அக்கறை எடுத்துக் கொள்வது கிடையாது. கருத்து சொல்வது கிடையாது. மத்திய அரசாங்கத்திடம் உரிமையை நிலைநாட்டுவது கிடையாது. மாநில அரசு முடிவெடுத்த பிறகு அதற்கு மேல் ஒரு கருத்தை சொல்வதற்கு யு.சி.ஜி.க்கு எந்தவித அருகதையும் கிடையாது. அப்படி ஏதாவது கருத்து சொல்ல வேண்டுமென்றால் மாநில அரசாங்கத்திடம் தனிப்பட்ட முறையில் கடிதம் மூலமாக சொல்லலாம். பொதுவெளியில் கூறுவது அத்துமீறல்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story