களக்காட்டில் அதிகபட்சமாக 73.6 மில்லி மீட்டர் பதிவு தூத்துக்குடி, தென்காசியிலும் பரவலாக பெய்தது - நெல்லையில் விடிய விடிய கனமழை உப்பளங்கள் நீரில் மூழ்கின


களக்காட்டில் அதிகபட்சமாக 73.6 மில்லி மீட்டர் பதிவு தூத்துக்குடி, தென்காசியிலும் பரவலாக பெய்தது - நெல்லையில் விடிய விடிய கனமழை உப்பளங்கள் நீரில் மூழ்கின
x
தினத்தந்தி 7 Nov 2020 1:24 AM GMT (Updated: 7 Nov 2020 1:24 AM GMT)

நெல்லை மாவட்டத்தில் நேற்று முன் தினம் இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பரவலாக பெய்த மழையால் உப்பளங்கள் நீரில் மூழ்கின.

நெல்லை,

வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவிலும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, அம்பை, பாபநாசம், மணிமுத்தாறு, களக்காடு, தென்காசி, செங்கோட்டை, கடையம், கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழை இரவு விடிய விடிய நீடித்தது.

இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக களக்காடு பகுதியில் 73.6 மில்லி மீட்டர் மழை பதிவானது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால், நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 103.35 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 306 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,406 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 99.88 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 75.67 அடியாகவும் உள்ளது.

இதுதவிர கடனா அணையில் 68.10 அடியாகவும், ராமநதி அணையில் 63 அடியாகவும், கருப்பாநதி அணையில் 58.25 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணையில் 10.25 அடியாகவும், கொடுமுடியாறு அணையில் 30.50 அடியாகவும், அடவிநயினார் அணையில் 101 அடியாகவும் நீர்மட்டம் இருந்தது. குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி மறுகால் செல்கிறது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

நெல்லை டவுன், சந்திப்பு, பாளையங்கோட்டை, பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய பெய்த மழை நேற்று காலை 9 மணி வரை நீடித்தது. நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெறுவதால் ஆங்காங்கே சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. குறிப்பாக, நெல்லை டவுன் குற்றாலம் ரோடு மிகவும் மோசமாக உள்ளது. தற்போது பெய்த மழையால் அந்த சாலைகள் சேறும் சகதியுமாக மாறி மக்கள் நடமாட முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது. மேலும் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-

பாபநாசம் - 20, சேர்வலாறு - 12, மணிமுத்தாறு - 12.8, நம்பியாறு - 25, கொடுமுடியாறு - 60, அம்பை - 22, சேரன்மாதேவி - 9, நாங்குநேரி - 35, பாளையங்கோட்டை - 14.60, ராதாபுரம் - 7, நெல்லை - 5, களக்காடு - 73.6, மூலைக்கரைப்பட்டி - 13, கடனா - 10, ராமநதி - 10, கருப்பாநதி - 38, குண்டாறு - 31, அடவிநயினார் - 20, ஆய்க்குடி - 51, சங்கரன்கோவில் - 18, செங்கோட்டை - 43, சிவகிரி - 8, தென்காசி - 52.40,

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. விடிய விடிய பெய்த மழை காலை 9 மணி வரை நீடித்தது. ஒரு சில இடங்களில் அதற்கு மேலும் சாரலாக பெய்து கொண்டே இருந்தது.

தூத்துக்குடியில் நேற்று பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடந்தது. சிதம்பரநகர் மெயின் ரோடு, செயிண்ட் பீட்டர் கோவில் தெரு, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.

தூத்துக்குடி பகுதியில் உள்ள உப்பளங்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கின. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 46 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-

திருச்செந்தூர் - 22, காயல்பட்டினம் - 23, குலசேகரன்பட்டினம் - 20, விளாத்திகுளம் - 16, காடல்குடி - 16, வைப்பார் - 29, சூரங்குடி - 16, கோவில்பட்டி - 29, கழுகுமலை - 12, கயத்தாறு - 18, கடம்பூர் - 44, ஓட்டப்பிடாரம் - 40, மணியாச்சி - 6, வேடநத்தம் - 20, கீழஅரசடி - 12, எட்டயபுரம் - 32, சாத்தான்குளம் - 12, ஸ்ரீவைகுண்டம் - 13.

Next Story