ஜெயிலில் இருந்து பரோலில் வந்த பேரறிவாளனுக்கு விழுப்புரத்தில் சிகிச்சை
ஜெயிலில் இருந்து பரோலில் வந்த பேரறிவாளனுக்கு விழுப்புரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஜோலார்பேட்டை,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் பரோல் கேட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி ஒரு மாத பரோலில் 3-வது முறையாக கடந்த 9-ந்தேதி சென்னை புழல் சிறையில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவலுடன் ஜோலார்பேட்டையில் உள்ள தனது இல்லத்திற்கு வந்தார்.
அதன்பிறகு அவரது வீட்டை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பரோலில் வந்துள்ள பேரறிவாளனின் தாயார், அற்புதம்மாள் மீண்டும் பரோல் வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, மேலும் 15 நாள் பரோல் வழங்கலாம் என உத்தரவிட்டார். இதனால் நாளை பரோல் முடியும் நிலையில் மேலும் 15 நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கையெழுத்து
பேரறிவாளனை சந்திக்க ரத்த சம்பந்த உறவுகளை தவிர்த்து, வெளியாட்கள் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. கொரோனா தொற்று காரணமாக பேரறிவாளன் வீட்டிலிருந்து போலீஸ் நிலையம் வந்து கையெழுத்திடுவதை தவிர்த்து, நாள்தோறும் ஜோலார்பேட்டை போலீசாரே அவரது வீட்டிற்கு சென்று கையெழுத்து வாங்கி வருகின்றனர்.
பேரறிவாளனுக்கு சிறுநீரக நோய் தொற்று காரணமாக சிறையில் இருக்கும் போது, அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் டாக்டரின் ஆலோசனைப்படி கடந்த 25-ந்தேதியன்று காலை 8 மணிக்கு இன்ஸ்பெக்டர் பழனிமுத்து தலைமையில் அவர் போலீஸ் பாதுகாப்புடன் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அன்று மாலை 3 மணிக்கு மீண்டும் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு வந்தடைந்தார்.
விழுப்புரத்தில் சிகிச்சை
இந்த நிலையில் 2-வது முறையாக பேரறிவாளன், துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் விழுப்புரம் நேருஜி வீதி காந்தி சிலை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று காலை 11.30 மணிக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு டாக்டர், அவருக்கு தீவிர பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தார்.
இதனை தொடர்ந்து இருதயம், குடல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு விழுப்புரம்-திருச்சி சாலையில் உள்ள 2 மருத்துவமனைகளுக்கு பேரறிவாளன் அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சையை முடித்துக்கொண்டு அவர் இரவு 7.20 மணிக்கு வீடு திரும்பினார்.
Related Tags :
Next Story