இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும் முதல்-மந்திரி எடியூரப்பா நம்பிக்கை


இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும் முதல்-மந்திரி எடியூரப்பா நம்பிக்கை
x
தினத்தந்தி 9 Nov 2020 3:30 AM IST (Updated: 9 Nov 2020 5:25 AM IST)
t-max-icont-min-icon

இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள ஆர்.ஆர்.நகர், சிரா ஆகிய தொகுதிகளுக்கு கடந்த 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவியது. இதில் பதிவான வாக்குகள் நாளை (செவ்வாய்க்கிழமை) எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது. இதில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இடைத்தேர்தல் நடைபெற்ற 2 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

இடைத்தேர்தல் நடைபெற்ற ஆர்.ஆர்.நகர், சிரா ஆகிய 2 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி. ஆர்.ஆர்.நகரில் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், சிராவில் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்திலும் பா.ஜனதா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இதை நான் சொல்லவில்லை, இடைத்தேர்தலுக்கு முன்பும், தேர்தல் தினத்தன்றும் கூறினேன். நான் கூறிய இந்த கருத்தை காங்கிரஸ் மென்மையாக எடுத்துக் கொண்டது.

இடைத்தேர்தல் முடிவு வெளிவரும்போது, இதன் உண்மை நிலை அவர்களுக்கு தெரியவரும். காங்கிரஸ் வெற்றி பெறும் என்று சித்தராமையா கூறியுள்ளார். 10-ந் தேதி (நாளை) தேர்தல் முடிவு வெளிவரும்போது அவருக்கு யார் வெற்றி பெறுவார்கள் என்பது தெரியும். இருந்தாலும் அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story