சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு - மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மகனை பார்க்க சென்றபோது சம்பவம்


சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு - மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மகனை பார்க்க சென்றபோது சம்பவம்
x
தினத்தந்தி 16 Nov 2020 4:36 AM GMT (Updated: 16 Nov 2020 4:36 AM GMT)

சிதம்பரம் அருகே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகனை பார்க்க சென்றபோது, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

அண்ணாமலைநகர், 

சிதம்பரம் அருகே உள்ள வெங்காய தலைமேடு கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி கோமதி (வயது 51). இவர்களுடைய மகன் பிரகாஷ். இவர் திருமணமாகாத ஏக்கத்தில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கோமதி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது மகனை பார்ப்பதற்காக உறவினர் ராஜபாலன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டார்.

அண்ணாமலைநகர் பொறியியல் கல்லூரி சாலையில் சென்ற போது மாடு ஒன்று சாலையின் குறுக்கே வந்ததால், ராஜபாலன் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதில் பின்னால் அமர்ந்திருந்த கோமதி, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை கோமதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சின்னசாமி கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story