சேலத்தில் குடிசை பகுதிகளில் வசிக்கும் 1 லட்சம் பேருக்கு இலவச முககவசங்கள் வழங்கும் பணி - மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்


சேலத்தில் குடிசை பகுதிகளில் வசிக்கும் 1 லட்சம் பேருக்கு இலவச முககவசங்கள் வழங்கும் பணி - மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 18 Nov 2020 5:35 AM GMT (Updated: 18 Nov 2020 5:35 AM GMT)

சேலத்தில் குடிசை பகுதிகளில் வசிக்கும் 1 லட்சம் பொதுமக்களுக்கு இலவச முககவசங்கள் வழங்கும் பணியை மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

சேலம், 

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலங்களில் உள்ள 60 கோட்ட பகுதிகளிலும் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக தற்போது மாநகர பகுதிகளில் கொரோனா தொற்று நோய் பரவல் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களின் நலன் கருதி மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மாநகர் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தொற்று பரவலை தடுத்திடும் வகையில் பொதுமக்கள் அனைவரும் பொது வெளிகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்திட வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்தால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதை ஊக்குவிக்கும் வகையில், கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட 47-வது கோட்டத்தில் அம்பேத்கர் தெருவில் குடிசை பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்களுக்கு இலவச முககவசங்கள் வழங்கும் பணியை மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். அப்போது அவர், துணியால் தயார் செய்யப்பட்ட, துவைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையிலான முககவசங்களை தலா 2 வீதம் பொதுமக்களுக்கு வழங்கி பேசினார்.

அவர் பேசும் போது, ‘அடுத்தடுத்த கட்டங்களாக மாநகரில் குடிசை பகுதிகளில் வாழும் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு, இலவசமாக முககவசங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது‘ என்றார். இந்நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் கே.பார்த்திபன், உதவி ஆணையாளர் பி.ரமேஷ்பாபு, சுகாதார அலுவலர் கே.ரவிசந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story