கமல்ஹாசன் அரசியலை சினிமா சூட்டிங் போல் நினைக்கிறார் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி


கமல்ஹாசன் அரசியலை சினிமா சூட்டிங் போல் நினைக்கிறார் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 18 Nov 2020 5:15 PM IST (Updated: 18 Nov 2020 5:56 PM IST)
t-max-icont-min-icon

அரசியலை கமல்ஹாசன் சூட்டிங் போல் நினைக்கிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை,

மதுரை மாநகராட்சி துரைச்சாமி நகர், வானமாமலை நகர் மற்றும் சொக்கலிங்க நகர் ஆகிய பகுதிகளில் நேற்று பெய்த கனமழையினால் தேங்கியுள்ள மழைநீரினை அகற்றும் பணியினை மாநகராட்சி கமிஷனர் விசாகன் தலைமையில் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழை தற்போது பெய்து வருகிறது. இதனால் மழைநீர் ஆங்காங்கே சாலைகளில் தேங்கி உள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் மாநில நெடுஞ்சாலை துறையின் மூலம் புதிய சாலைகள் உயரமாக போடப்பட்டுள்ளன. ஏற்கனவே குடியிருப்புகள் உள்ள சாலைகள் தாழ்வாக உள்ளது.

இந்த சாலைகளை உயர்த்தி கட்டினால் வீடுகள் பள்ளமாகி அதிக பாதிப்பு ஏற்படும். அதனால் ஆங்காங்கே கிணறுகள் அமைத்து அங்கு தேங்கும் மழைநீரினை மோட்டார் மூலம் எடுத்து அருகில் உள்ள மழைநீர் வடிகால்களில் சேர்ப்பதற்கும், கழிவுநீர் வாய்க்கால்களில் இணைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆபத்து பணியில் ஈடுபடும் ஒவ்வொரு அரசு ஊழியர்களுக்கும் அரசாணையின்படி நிதியுதவி வழங்கி வாரிசுகளுக்கு பணி நியமனங்கள் வழங்கப்படும் என அறிவித்து உள்ளார். பொதுவாக தேர்தல் நேரம் என்பதால் எதிர்க்கட்சிக்காரர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள். இதை எல்லாம் பெரிதுபடுத்த தேவையில்லை. பழமையான கட்டிடங்களுக்கு வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கமல்ஹாசன் சினிமா நடிகர். அவர் அரசியல் செய்ய வந்திருக்கிறார். அவர் அரசியலை ஏதோ சினிமா சூட்டிங் போல நினைக்கிறார். கமல்ஹாசனுக்கு எதுவும் தெரியாது. ஏதோ பேசுகிறார். யாரோ எழுதிக் கொடுத்ததை சொல்கிறார். மாலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிக்கிறார். இப்படி பேசுவது நாகரிகம் கிடையாது.

காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் எம்.ஜி.ஆர். படத்தை பயன்படுத்துவது குறித்து கருத்துக்கூற முடியாது. எம்.ஜி.ஆர். ஒரு தேசியத் தலைவர். அவர் ஒரு உலக தலைவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story