திண்டுக்கல் அருகே ரெயில் தண்டவாளத்தில் உருண்டு விழுந்த ராட்சத பாறாங்கல் வைகை எக்ஸ்பிரஸ் தப்பியது


திண்டுக்கல் அருகே ரெயில் தண்டவாளத்தில் உருண்டு விழுந்த ராட்சத பாறாங்கல் வைகை எக்ஸ்பிரஸ் தப்பியது
x
தினத்தந்தி 19 Nov 2020 6:02 AM GMT (Updated: 19 Nov 2020 6:02 AM GMT)

திண்டுக்கல் அருகே ரெயில் தண்டவாளத்தில் ராட்சத பாறாங்கல் உருண்டு விழுந்தது. இதனை என்ஜின் டிரைவர் கவனித்து நிறுத்தியதால் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் சிக்காமல் தப்பியது.

சின்னாளபட்டி, 

திண்டுக்கல்-மதுரை இடையே இருவழி ரெயில் பாதை உள்ளது. திண்டுக்கல்லில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லும் ரெயில்கள் அம்பாத்துரை, கொடைரோடு வழியாக மதுரை செல்கின்றன. ஆனால் மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து திண்டுக்கல் வழியாக திருச்சி, சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் ரெயில்கள் கொடைரோடு, அம்பாத்துரை, முருகம்பட்டி வழியாக திண்டுக்கல்லை வந்தடைகிறது. இதில் முருகம்பட்டி பகுதியில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மலையை இரண்டாக பிளந்து ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரெயில் பாதை வழியாக செல்லும் ரெயில்கள் 10 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று அதிகாலை அம்பாத்துரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது முருகம்பட்டியில் ரெயில் தண்டவாளம் அமைந்துள்ள பகுதியில் திடீரென மண்சரிவு ஏற்பட்டு பாறாங்கற்கள் உருண்டு தண்டவாள பகுதியில் விழுந்தன.

இதில் ஒரு ராட்சத பாறாங்கல் தண்டவாளத்தின் மைய பகுதியில் விழுந்தது. இந்த நிலையில் நேற்று காலை மதுரையில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் கொடைரோடு ரெயில் நிலையத்தை கடந்து முருகம்பட்டி மலைப்பகுதி அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் ராட்சத பாறாங்கல் விழுந்து கிடப்பதை என்ஜின் டிரைவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் ரெயிலை மலைப்பகுதியை அடைவதற்கு சற்று தொலைவிலேயே நிறுத்தினார்.

பின்னர் அவர் ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து கொடைரோடு, அம்பாத்துரை மற்றும் திண்டுக்கல்லில் இருந்து ரெயில்வே ஊழியர்கள் முருகம்பட்டி பகுதிக்கு வந்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்த பாறாங்கல் மற்றும் சரிந்து விழுந்த மணலை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பாறாங்கல் பெரியதாக இருந்ததால் அதனை உடைத்து அகற்றினர். இந்த பணி சுமார் ¾ மணி நேரம் நடந்தது.

அதன் பின்னர் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு திண்டுக்கல்லுக்கு ஒரு மணி நேரம் தாமதமாக வந்தது. ரெயில் தண்டவாளத்தில் ராட்சத பாறாங்கல் விழுந்து கிடந்ததை என்ஜின் டிரைவர் கவனித்து சாமர்த்தியமாக ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்தில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது.


Next Story