திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியின்போது ஓட்டலில் பரிமாறிய உணவில் கண்ணாடி துண்டுகள் - 6 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
வேலூரில் உள்ள ஓட்டலில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவில் கண்ணாடி துண்டுகள் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர்,
வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியை அவரது குடும்பத்தினர் சத்துவாச்சாரி மாவட்ட அறிவியல் மையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடத்தினர். அதில் இரு வீட்டாரும் கலந்து கொண்டனர். காலையில் நிச்சயதார்த்தம் முடிந்ததும் அந்த ஓட்டலில் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் இரு வீட்டினர் மற்றும் உறவினர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் உணவு சாப்பிட்டனர். அப்போது ஒருவரது இலையில் கண்ணாடி துகள்கள் மற்றும் துண்டுகள் இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஓட்டல் நிர்வாகத்தினரிடம் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர்கள் முறையான பதிலை தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனிடையே உணவு சாப்பிட்ட 6 பேருக்கு வயிறு, தொண்டை பகுதியில் எரிச்சல் மற்றும் வலி இருந்ததால் அவர்கள் வேலூரில் உள்ளள தனியார் மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக சென்றனர். அங்கு அவர்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சிலரும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதனை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெண் வீட்டார் கூறுகையில், ஓட்டலில் பரிமாறப்பட்ட உணவை சாப்பிடும் போது இலையில் கண்ணாடி துண்டுகள் காணப்பட்டது. அந்த கண்ணாடி துண்டுகள் அனைத்தும் டியூப் லைட்டில் இருந்து உடைந்த பாகங்கள். ஓட்டல் சமையல் அறையில் இருந்த டியூப்லைட் உடைந்து உணவில் விழுந்துள்ளது. இதனை ஓட்டல் ஊழியர்கள் கவனிக்கவில்லை. அவர்கள் அலட்சியமாக பதில் தெரிவித்தனர் என்றனர்.
பின்னர் நிச்சயதார்த்தம் நடத்திய குடும்பத்தினர் சார்பில் ஓட்டல் நிர்வாகம் மீது வேலூர் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story