பெங்களூருவில் தகவல் தொழில்நுட்ப மாநாடு-2020 பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
கர்நாடக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தொழில்நுட்ப மாநாட்டை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், “கொரோனா பரவல் காரணமாக சில மாதங்களில் மக்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாறிவிட்டனர்” என்று குறிப்பிட்டார்.
பெங்களூரு,
கர்நாடக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு-2020 தொடக்க விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.
இதில் பிரதமர் மோடி காணொலியில் கலந்து கொண்டு அந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-
டிஜிட்டல் இந்தியா என்பது தற்போது அரசின் திட்டமாக மட்டும் இருக்கவில்லை. இது தற்போது மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. டிஜிட்டல் தொழில்நுட்பம் மக்களுக்கு அரசு மற்றும் தனியார் சேவைகள் பாகுபாடு இன்றி விரைவாக கிடைக்க உதவுகிறது. குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், அடித்தட்டு மக்கள் மற்றும் அரசுக்கு இந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதற்காக டிஜிட்டல் இந்தியாவுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்.
பரிணாம வளர்ச்சி
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வீட்டில் இருந்து பணியாற்றுதல், எங்கிருந்து வேண்டுமானாலும் பணியாற்றுதல் நடைமுறை வந்துள்ளது. இனி வரும் காலத்தில் இந்த முறை தொடர்ந்து இருக்கும். கல்வி, சுகாதாரம், வணிக வளாகங்களில் பொருட்கள் வாங்குதலில் இந்த தொழில்நுட்பம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. எந்த ஒரு மாற்றமும் நிகழ வேண்டுமென்றால் அதற்கு 10 ஆண்டுகள் ஆகும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக மக்கள் சில மாதங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாறிவிட்டனர்.
நமது நாடு வளர்ச்சியில் மக்களை மையப்படுத்தும் தன்மையை அனுசரிக்கிறது. நீங்கள் இந்த தொழில்நுட்பத்துறையின் டிரைவர்கள். உற்பத்தி சார்ந்த புதுமையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல நாம் மனசாட்சிப்படி முயற்சி மேற்கொள்ள முடியுமா?. கட்டமைப்பு ரீதியிலான மனநிலை, வெற்றிகரமாக பன்முக உற்பத்தியை ஏற்படுத்தும் சூழ்நிலையை அமைக்கும். பாதுகாப்பு துறை பரிணாம வளர்ச்சி அடைவதில் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றுகிறது. முன்பு போர்கள் நல்ல யானைகள் மற்றும் குதிரைகள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு வெடி மருந்து ஆயுத பலம் வந்தது.
தொழில்நுட்பம் வரையறுக்கிறது
ஆனால் தற்போது உலக பிரச்சினைகளில் தொழில்நுட்பம் மிக முக்கிய பங்கு ஆற்றுகிறது. மென்பொருள் முதல் பறக்கும் கேமராக்கள், ஆளில்லா உளவு விமானங்கள் உற்பத்தி வரையில் பாதுகாப்புத்துறையை தொழில்நுட்பம் வரையறுக்கிறது. அதிக அளவிலான தொழில்நுட்ப பயன்பாடு, விவரங்களை பாதுகாத்தல், சைபர் பாதுகாப்பு மிக முக்கியமாக மாறி இருக்கிறது. சைபர் பாதுகாப்புக்கு தீர்வுகளை கண்டறிவதில் நமது இளைஞர்கள் மிக முக்கிய பங்காற்ற முடியும்.
இதன் மூலம் சைபர் தாக்குதல்கள் அதாவது இணையதள திருட்டு மற்றும் வைரஸ் ஊடுருவலை தடுத்து டிஜிட்டல் உற்பத்திகளை சிறப்பான முறையில் பாதுகாக்க முடியும். சிறப்பான விவரங்களை நிர்வகிக்கும் கட்டமைப்பை உருவாக்க நாங்கள் முன்னுரிமை அளித்து வருகிறோம். அறிவியல் துறையிலும் புதுமைகளை உருவாக்கும் தேவை உள்ளது. அது உயிரி அறிவியலாக இருந்தாலும் சரி, பொறியியலாக இருந்தாலும் சரி. முன்னேற்றம் அடைய புதிய கண்டுபிடிப்புகள் மிக முக்கியமானது ஆகும்.
மனிதர்களின் கண்ணியம்
இளைஞர்கள் புதிய கண்டுபிடிப்புகளில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதற்கான திறமையும் அவர்களிடம் உள்ளது. அதனால் தான் புதுமையை கண்டுபிடித்தல் என்று வருகிறபோது, அதற்கான சாதகமான அம்சங்கள் நம்மிடம் அதிகமாக இருக்கின்றன. எங்கள் அரசு, தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டலுக்கு வெற்றிகரமான சந்தையை உருவாக்கியுள்ளது. அரசின் அனைத்து திட்டங்களிலும் தொழில்நுட்ப பயன்பாட்டை மிக முக்கிய அம்சமாக நாங்கள் மாற்றியுள்ளோம்.
முதலில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தான் எங்கள் அரசின் நோக்கம். தொழில்நுட்பம் மூலம் மனிதர்களின் கண்ணியத்தை அதிகரித்துள்ளோம். நாட்டில் லட்சக்கணக்கான விவசாயிகள், அரசின் திட்ட பண பயன்களை ஒரு பொத்தானை அழுத்தி பெற்றுள்ளனர். கொரோனா ஊரடங்கின்போது, ஏழை மக்களுக்கு அரசின் உதவிகள் சரியான முறையில் விரைவாக கிடைத்தது. மக்களை ஒன்றிணைப்பதில் புதுமையான வாய்ப்புகளை தொழில்நுட்பத்துறை அங்கீகரித்துள்ளது. கொரோனா வைரஸ் வளர்ச்சியில் ஒரு சுணக்கத்தை தான் ஏற்படுத்தியுள்ளது. வளர்ச்சி முழுமையாக தடைபடாது.
மின்சார வசதி
நாட்டில் இன்று அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதி கொடுக்க முடிந்தது என்றால் அதில் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றியுள்ளது. நாட்டில் இணையதள இணைப்பு வசதி பெற்றவர்களின் எண்ணிக்கை 750 மில்லியனை (75 கோடி) தாண்டிவிட்டது. இதில் 50 சதவீத இணைப்புகள் கடந்த 4 ஆண்டுகளில் பெற்றவை ஆகும். மென்பொருள் திட்டங்கள் இந்தியாவில் உருவாக்கப்படுகிறது. ஆனால் இந்த உலகத்திற்கு அனுப்பப்படுகிறது. எதிர்வரும் காலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அத்தியாயத்தில் இந்தியா முன்னேற்றம் அடைந்து சிறப்பிடத்தை பிடிக்கும்.
நமது உள்ளூர் மென்பொருள் திட்டங்கள் உலகளவில் செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதில் இந்தியா நல்ல இடத்தில் உள்ளது. எங்கள் அரசின் கொள்கை முடிவுகள் தொழில்நுட்பம் மற்றும் புதுமையை கண்டுபிடித்தல் துறைக்கு எப்போதும் சாதகமாக இருக்கின்றன. சமீபத்தில் இந்த தகவல் தொழில்நுட்ப துறை மீது இருந்த சுமைகள், சிக்கல்களை எளிமையாக்கியுள்ளோம்.
இந்த துறை தொடர்பாக எதிர்கால கொள்கைகளை வகுப்பதில் அந்த துறை சார்ந்த நிர்வாகிகளின் ஆலோசனைகனை கேட்க நாங்கள் எப்போதும் முயற்சி செய்து இருக்கிறோம்.
இவ்வாறு மோடி பேசினார்.
முதல்-மந்திரி எடியூரப்பா
விழாவில், முதல்-மந்திரி எடியூரப்பா, துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், தொழில் துறை மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் இந்த மாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர், சுவிட்சர்லாந்து துணை அதிபர் மற்றும் 25 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் காணொலிக்காட்சி மூலம் கலந்துகொண்டனர். இந்த மாநாடு இன்றும், நாளையும் தொடர்ந்து நடக்கிறது.
Related Tags :
Next Story