வீட்டின் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து புதுமாப்பிள்ளை பலி - தலை தீபாவளி கொண்டாடிவிட்டு சென்னை திரும்பிய 2 நாளில் பரிதாபம்
தலை தீபாவளி கொண்டாடிவிட்டு சென்னை வந்த 2 நாளில், வீட்டின் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.
ஆலந்தூர்,
சென்னை மடிப்பாக்கம் அடுத்த புழுதிவாக்கம் ராம்நகர் 11-வது தெருவில் வசித்து வந்தவர் வேங்கை ராஜன் (வயது 27). இவரது சொந்த ஊர் மதுரை தெப்பக்குளம் ஆகும். இவர், ஆஸ்பத்திரிக்கு தேவையான உபகரணங்களை தயாரித்து வினியோகம் செய்யும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இவருடன் மதுரையைச் சேர்ந்த நண்பர்கள் 13 பேர் ஒன்றாக ஒரே வீட்டில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். வேங்கைராஜனுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணமானது. மனைவியுடன் தலை தீபாவளியை கொண்டாடிவிட்டு மதுரையில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார்.
நேற்று அதிகாலை தன்னுடன் தங்கியிருக்கும் அருண் என்ற நண்பர் கதவை தட்டினார். இதனால் தூக்க கலக்கத்தில் வெளியே வந்த வேங்கைராஜன் கதவை திறந்து விட்டார். அதன்பிறகு காலையில் மற்றொரு நண்பரான குமரேசன், ஊரில் இருந்து திரும்பி வந்தார்.
அப்போது வீட்டின் அருகில் உள்ள காலி மைதானத்தில் வேங்கை ராஜன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த மடிப்பாக்கம் போலீசார், வேங்கை ராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், தூக்க கலக்கத்தில் வந்து கதவை திறந்த வேங்கை ராஜன், வீட்டின் 2-வது மாடியில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தது தெரிந்தது. இதுபற்றி மடிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story