தொடரும் கனமழையால் எப்போதும்வென்றான் நீர்த்தேக்கம் நிரம்பியது விவசாய பணிகள் தொடக்கம்
ஓட்டப்பிடாரம் அருகே கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் எப்போதும் வென்றான் நீர்த்தேக்கம் நிரம்பி வழிகிறது. இது சுற்றுவட்டார பகுதி விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த பகுதியில் விவசாய பணிகள் தொடங்கி உள்ளன.
ஓட்டப்பிடாரம்,
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கயத்தாறு, கழுகுமலை, கடம்பூர் ஆகிய பகுதிகளில் பெய்த மழை நீர் எப்பொதும்வென்றான், ஆதனூர் வழியாக வேப்பலோடை அருகே கடலில் கலக்கிறது. மழை நீர் கடலில் வீணாக செல்வதை தடுக்க வேண்டும் என்று எப்போதும்வென்றான் கிராம பொது மக்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பல போராட்டங்கள் நடத்தியதின் வாயிலாகவும் வறண்ட ஓட்டப்பிடாரம் பகுதியை வளமாக்கும் வகையிலும் மழை நீரை தேக்கி வைக்கும் வகையிலும் தமிழக அரசு கடந்த 30.6.1976-ம் ஆண்டு எப்பொதும்வென்றான் நீர்த்தேக்கத்தை அமைத்தது.
இதனால் எப்போதும்வென்றான் நீர்த்தேக்கத்திலிருந்து வேப்பலோடை வழியாக கடலில் கலக்கும் மழைநீர் விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டது. இந்த நீர்த்தேக்கம் மூலம் எப்பொதும்வென்றான், காட்டுநாயக்கன்பட்டி, ஆதனூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த 837.78 ஹெக்டேர் பரப்பு நிலம் பாசன வசதி பெற்று வந்தது. இந்த அணை 3 மீட்டர் உயரம் கொண்ட 120 மில்லி மீட்டர் கன அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கும் அளவில் அமைக்கப்பட்டுள்ளது. அணையின் கரை 2670 மீட்டர் நீளம் உள்ளது. இரண்டு மதகுகள் உள்ளன. அணையின் நீர்பிடிப்பு பகுதி 465.93 ஏக்கர் ஆகும்.
கரிசல் மண் திட்டுகள்
1976 -ம்ஆண்டுக்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் தென்மாவட்டங்களில் குறைந்த அனவு மழை பெய்தாலும் எப்பொதும்வென்றான் நீர்த்தேக்கம் நிரம்பி வந்தது. நீர்த்தேக்கம் கட்டப்பட்ட ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மழைநீருடன் கரிசல் மண்ணும் அடித்து வரப்படுகிறது. இவ்வாறு வரும் கரிசல்மண் அணையில் தேங்குவதால் நீர் கொள்ளளவு குறைந்து கொண்டே வருகிறது. இந்த நீர்த்தேக்கம் தூர்வாரப்படாததால் கரிசல் மண் திட்டுகளாக அமைத்து உள்ளது. தற்போது 50 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே தேக்க முடிகிறது. இதனால் விவசாயத்துக்கு பொதுமானதாக இல்லை.
நிரம்பி வழிகிறது
இந்த நிலையில் கடந்த 38 ஆண்டுகளாக நிரம்பி வந்த நீர்த்தேக்கம் கடந்த2014, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் நிரம்பவில்லை. இந்த ஆண்டு கயத்தாறு, கடம்பூர் பகுதியில் பெய்த கன மழையில் நேற்று நீர்த்தேக்கம் நிரம்பியது. தொடர்்ந்து தண்ணீர் வரத்து இருந்து வருவதால், நீர்த்தேக்கம் நிரம்பி, அதிலிருந்து அதிகபடியாக உபரிநீர் வெளியேறி ஆதனூர் கட்டப்பொம்மன் குளம், தெற்கு கல்மேடு குளங்களும் நிரம்பின. இதனால் மழை காலம் தாழ்த்தி பெய்ததாலும் எப்பொதுவென்றான் கிராம விவசாயிகள் மகிழ்ச்சியாக விவசாய பணியை தொடங்க உள்ளனர்.
தற்போது அணையின் ஆழம் 1.50 மீட்டருக்கும் குறைவாக கரிசல் மண் திட்டுகளால் நிரம்பி உள்ளது. இதனால் விவசாய நிலம் பாதியாக குறைந்து எப்போதும்வென்றான் கிராம விவசாயிகள் விவசாயம் செய்யும் பரப்பளவும் குறைந்துள்ளது. காட்டுநாயக்கன்பட்டி, ஆதனூர் ஆகிய கிராம விவசாயிகள், தங்களது நிலங்களில் சிலர் மழையை நம்பி உள்ளனர். சிலர் தரிசு நிலங்களாக விட்டுவிட்டனர்.
கிடப்பில் போடப்பட்ட தூர்வாறும் பணி
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குறைவான அளவு மழை பெய்ததால் தூத்துக்குடி மாவட்டம் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதனால் மத்திய வறட்சி குழு எப்போதும்வென்றான் நீர்த்தேக்கம் வரும் நிதியாண்டில் ரூ.20 கோடி அளவில் தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறிவிட்டு சென்றனர். இதனை தொடர்ந்து அப்போதைய பொதுப்பணிதுறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் வந்த மாநில வறட்சி குழுவும் அணையை ரூ.20 கோடி அளவில் தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதி கூறினர். இதனை தொடர்ந்து பொதுப்பணி துறையினர் அணையை தூர்வார ரூ.20 கோடியில் திட்டமதிப்பீடு தயார் செய்தனர். ஆனால் தூர்வாரும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த பணியை விரைந்து தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக எப்போதும்வென்றான் நீர்த்தேக்கம் நிரம்பி வழிவது, விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகள் விளைநிலங்களில் நெல் நாற்று நடவிற்கு தேவையான நெல் நாற்றங்காலை உருவாக்கி வருகின்றனர்.
Related Tags :
Next Story