போலீஸ் காவல் நிறைவு: வன்முறை வழக்கில் கைதான முன்னாள் மேயர் சிறையில் அடைப்பு


போலீஸ் காவல் நிறைவு: வன்முறை வழக்கில் கைதான முன்னாள் மேயர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 20 Nov 2020 10:32 PM GMT (Updated: 20 Nov 2020 10:32 PM GMT)

போலீஸ் காவல் நிறைவு பெற்ற நிலையில், வன்முறை வழக்கில் கைதான முன்னாள் மேயர் சம்பத்ராஜ் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் சிறையில் வைத்து விசாரணை நடத்த என்.ஐ.ஏ.வுக்கு, கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.

பெங்களூரு, 

பெங்களூரு கே.ஜி.ஹள்ளி, டி.ஜே.ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி வன்முறை வெடித்தது. அப்போது புலிகேசிநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாசமூர்த்தியின் வீட்டிற்கும் தீ வைக்கப்பட்டது. வன்முறை சம்பவம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வன்முறை வழக்கு தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலரின் கணவர் உள்பட 350-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே அரசியல் காரணங்களுக்காக எம்.எல்.ஏ.வின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டு உள்ளதாக கூறி, பெங்களூரு மாநகராட்சியின் முன்னாள் மேயர் சம்பத்ராஜை கடந்த 16-ந் தேதி நள்ளிரவில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து இருந்தனர்.

சிறையில் அடைப்பு

அவரை 2 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். நேற்று முன்தினம் அவரது போலீஸ் காவல் நிறைவு பெற்றது. இதையடுத்து அவரை பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் காணொலி காட்சி மூலம் போலீசார் ஆஜர்படுத்தி இருந்தனர். அப்போது வன்முறை சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்த போலீசார் அனுமதி கோரி இருந்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சம்பத்ராஜின் காவலை நேற்று ஒரு நாள் நீட்டிப்பு செய்தார். இதையடுத்து சம்பத்ராஜிடம், வன்முறை சம்பவம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமிஷனர் வேணுகோபால் தலைமையிலான போலீசார் விசாரித்து தகவல்களை பெற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில் போலீஸ் காவல் நிறைவு பெற்ற நிலையில் நேற்று மீண்டும் சம்பத்ராஜ், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வருகிற 24-ந் தேதி வரை 5 நாட்கள் சம்பத்ராஜை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சம்பத்ராஜ் அடைக்கப்பட்டார்.

என்.ஐ.ஏ. விசாரணைக்கு அனுமதி

இதற்கிடையே வன்முறை சம்பவத்தில் பயங்கரவாத அமைப்பினருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்து உள்ளதால், வன்முறை சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அவர்கள் வன்முறை சம்பவம் குறித்து சம்பத்ராஜிடம் விசாரிக்க அனுமதி கேட்டு பெங்களூரு கோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தனர்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி வருகிற 23, 24-ந் தேதிகளில் சிறையில் வைத்து சம்பத்ராஜிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளார்.

Next Story