மக்காச்சோளம்-பருத்தியை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம், விவசாயிகள் வலியுறுத்தல்


மக்காச்சோளம்-பருத்தியை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம், விவசாயிகள் வலியுறுத்தல்
x

மக்காச்சோளம்-பருத்தியை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கலெக்டரிடம் வலியுறுத்தினர்.

பெரம்பலூர்,

கொரோனா ஊரடங்கினால் கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு பெரம்பலூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் இந்த மாதத்திற்கான பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.

கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலக கூட்ட அரங்கில், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காணொலி காட்சி மூலம் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை கலெக்டரிடம் தெரிவித்தனர்.

அப்போது கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா விவசாயிகளிடையே பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் நவம்பர் மாதம் பெய்த மழையளவு 702.81 மி.மீ ஆகும். பயிர் சாகுபடி பரப்பை பொறுத்தவரை தற்சமயம் 85 ஆயிரத்து 455 எக்டர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் கடன் அட்டை மூலம் ரூ.1.6 லட்சம் வரை அனைத்து வங்கிகளிலும் பிணையில்லாத கடன் பெற முடியும். மேலும் சரியான முறையில் கடனை திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு 4 சதவீதம் மட்டுமே வட்டி விதிக்கப்படும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் அமல்படுத்தப்பட்டுள்ள இ-அடங்கல் செயலியை விவசாயிகள் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து, தங்களது செல்போன் எண்ணை உள்ளீடு செய்தால், தங்களது நிலங்களின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறையின் மூலம் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும் மற்றும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் சொட்டு நீர் பாசனம் அமைத்திட மானியம் வழங்கப்படுகிறது. கூட்டுபண்ணையம் அல்லது தொகுப்பு பண்ணையம் வேளாண் உற்பத்தியாளர் குழு மூலம் அமைத்திடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகளை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம், என்றார்.

மேலும் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலக கூட்ட அரங்கிலிருந்து விவசாயிகள் காணொலி காட்சியின் வாயிலாக கலெக்டரிடம் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு பிரச்சினைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அறுவடை காலத்தில் நேரடி கொள்முதல் நிலையம் மூலம் நெல் கொள்முதல் செய்வதுபோல் மக்காச்சோளம் மற்றும் பருத்தியை அரசே கொள்முதல் செய்து மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். ஏரி, குளத்தில் உள்ள வரத்து வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துங்கபுரம் பகுதியில் மின்மாற்றியினை மாற்றி அமைத்து மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் சர்க்கரை ஆலை மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகையினை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேப்பந்தட்டை பகுதியில் 60 ஆண்டுகளாக நிலுவையிலுள்ள கனவு திட்டமான சின்னமுட்லு அணைக்கட்டு கட்டும் திட்டத்தினை விரைந்து செயல்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், என்றனர்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் பேசுகையில், பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆவண காப்பகத்தில் கிராமங்கள் ஆ-பதிவேடு நல்லமுறையில் பெறுவதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரளி துணை மின்நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சிறுகுடல் கிராமத்தில் மக்காச்சோளத்திற்கு போலி உரம் விற்பனை செய்தது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். இதேபோல் அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் மாணிக்கம் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோள பயிருக்கு காப்பீட்டு தொகை செலுத்த கால அவகாசம் கடந்த 15-ந்தேதியுடன் முடிவடைந்து விட்டது. நிறைய விவசாயிகள் காப்பீடு தொகை செலுத்தவில்லை. அதனை நீட்டித்து அந்தந்த கூட்டுறவு வங்கியில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். இது குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், பெரம்பலூர் வருவாய் கோட்ட சப்-கலெக்டர் பத்மஜா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் செல்வகுமரன், இணை இயக்குனர் (வேளாண்மைத்துறை) கருணாநிதி, துணை இயக்குனர் (தோட்டக்கலைத்துறை) பாத்திமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story