உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து: கரூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல்
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கரூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூர்,
நாகை மாவட்டம் திருக்குவளையில் நேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று மாலை கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வுமான வி.செந்தில்பாலாஜி தலைமையில், தி.மு.க.வினர் ஏராளமானோர் கண்டன கோஷங்களுடன் கோவை ரோட்டில் ஊர்வலமாக வந்து கரூர் பஸ்நிலையம் அருகே உள்ள மனோகரா ரவுண்டானாவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மத்திய கிழக்கு நகர செயலாளர் ராஜா, மத்திய மேற்கு நகர செயலாளர் அன்பரசு உள்பட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கப்பட்டதாக கூறியதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
குளித்தலை பஸ் நிலையம் அருகே நகர செயலாளர் மாணிக்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவிராஜா முன்னிலை வகித்தார். இதில் குளித்தலை நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். கரூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை வகித்தார். இதில், மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக பொறுப்பாளர்கள், பல்வேறு அணி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
தோகைமலை பஸ் நிலையம் எதிரே, குளித்தலை ராமர் எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் பொறுப்புக்குழு உறுப்பினர் பள்ளிப்பட்டி கருப்பையா, இளைஞரணி செயலாளர் சசிகுமார், கல்லடை முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story