ஆம்புலன்ஸ் வர தாமதத்தால் பிரசவத்தில் தாய், குழந்தை பலி


ஆம்புலன்ஸ் வர தாமதத்தால் பிரசவத்தில் தாய், குழந்தை பலி
x
தினத்தந்தி 21 Nov 2020 9:30 PM GMT (Updated: 21 Nov 2020 7:07 PM GMT)

ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் பிரசவத்தில் தாய், குழந்தை பரிதாபமாக உயிரிழந்தனர்.

வசாய்,

பால்கர் மாவட்டம் மோக்டா அருகே அம்லே கிராமத்தை சேர்ந்தவர் மணிஷா (வயது25) . இவர் 7 மாத கர்ப்பமாக இருந்தார். சம்பவத்தன்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவரது கணவர் சானியா ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல ஆம்புலன்சை தொடர்பு கொண்டு வரும்படி அழைப்பு விடுத்தார்.

ஆனால் வெகுநேரமாக ஆம்புலன்சு வராததால் சானியா உள்பட 4 பேர் சேர்ந்து போர்வையில் மணிஷாவை தூக்கி கொண்டு 3 கி.மீ தூரம் வரையில் வாடா சாலை வரையில் நடந்து வந்தனர். இதில் மணிஷாவிற்கு உடல் நலம் மோசமானது. வரும் வழியில் வந்த ஒரு ஆம்புலன்சை கண்டு வழிமறித்தனர்.

அதில் மணிஷாவை ஏற்றி கொண்டு நாசிக்கில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. இருப்பினும் மணிஷா சிகிச்சை பலனின்றி பலியானார். மேலும் பிறந்த குழந்தையும் பலியானது. ஆம்புலன்சு வர காலதாமதமானதால் தாயும், குழந்தையும் சிகிச்சை கிடைக் காமல் பலியானதாக உறவினர்கள் குற்றச்சாட்டினர்.

இது பற்றி பால்கர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி தயானந்த் சூர்யவன்சி, கொரோனா பணிக்காக விக்ரம்காட் பகுதிக்கு ஆம்புலன்ஸ் சென்று இருந்ததால் காலதாமதம் ஆனதாக தெரிவித்து உள்ளார்.

Next Story