3-வதும் பெண் குழந்தை பிறக்கும் என்பதால் கருத்தடை மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் சாவு - சிக்பள்ளாப்பூர் அருகே சோகம்
சிக்பள்ளாப்பூர் அருகே 3-வதும் பெண் குழந்தை பிறக்கும் என்பதால் கருவை கலைக்க கருத்தடை மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி திடீரென இறந்தார்.
சிக்பள்ளாப்பூர்,
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி தாலுகா பூலவர்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீகண்யா(வயது 27). இவருக்கு திருமணம் முடிந்து கணவரும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீகண்யா 3-வது முறையாக கர்ப்பம் அடைந்தார். அவர் பாகேபள்ளியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளதா என்பதை கண்டறிய ஸ்ரீகண்யா ஸ்கேன் எடுத்து இருந்தார். அந்த ஸ்கேனை பார்த்த டாக்டர், ஸ்ரீகண்யாவிடம் உங்கள் வயிற்றில் பெண் குழந்தை வளர்கிறது என்று கூறியதாக தெரிகிறது. தனக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளதால், 3-வதும் பெண் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இன்றி ஸ்ரீகண்யா இருந்து வந்ததாக தெரிகிறது.
மேலும் தனது வயிற்றில் பெண் குழந்தை வளர்வது குறித்து குடும்பத்தினரிடமும், ஸ்ரீகண்யா கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் தனது வயிற்றில் வளரும் கருவை கலைக்க ஸ்ரீகண்யா முடிவு செய்தார். இதற்காக அவர் கருத்தடை மாத்திரைகளை வாங்கியுள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது ஸ்ரீகண்யா கருத்தடை மாத்திரையை சாப்பிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த மாத்திரை சாப்பிட்ட சிறிது நேரத்தில் ஸ்ரீகண்யாவுக்கு ரத்த போக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் வீட்டில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடியுள்ளார்.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஸ்ரீகண்யாவை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் ஸ்ரீகண்யா இறந்து விட்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பாகேபள்ளி போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று ஸ்ரீகண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் 3-வதும் பெண் குழந்தை பிறக்க போகிறது என்பதை அறிந்த ஸ்ரீகண்யா அந்த கருவை கலைக்க கருத்தடை மாத்திரை சாப்பிட்டதும், ரத்தப்போக்கு அதிகமாகி இறந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து பாகேபள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
இதற்கிடையே சட்டத்தை மீறி வயிற்றில் வளருவது என்ன குழந்தை என்று கூறிய டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். கருவை கலைக்க கருத்தடை மாத்திரை சாப்பிட்ட பெண் இறந்த சம்பவம் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story