கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 2 நீட் பயிற்சி மையங்களுக்கு ‘சீல்’ - நாமக்கல்லில் பரபரப்பு


கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 2 நீட் பயிற்சி மையங்களுக்கு ‘சீல்’ - நாமக்கல்லில் பரபரப்பு
x
தினத்தந்தி 24 Nov 2020 3:30 AM IST (Updated: 24 Nov 2020 8:16 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 2 நீட் பயிற்சி மையங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. பயிற்சி மையங்களையும் திறக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நாமக்கல் போதுப்பட்டியில் உள்ள 2 தனியார் நீட் பயிற்சி மையங்களில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக உதவி கலெக்டர் கோட்டைகுமாருக்கு புகார் வந்தது.

இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் நாமக்கல் தாசில்தார் (பொறுப்பு) கதிர்வேல் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது போதுப்பட்டியில் உள்ள ‘மாஸ்டர்ஸ்’ என்ற நீட் பயிற்சி மையத்தில் 37 மாணவ, மாணவிகளுக்கும், அதே பகுதியில் உள்ள ‘பெதர்ஸ்’ என்ற நீட் பயிற்சி மையத்தில் 29 மாணவ, மாணவிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுவது தெரியவந்தது.

மேலும் தமிழக அரசு அறிவித்த கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாமலும், சமூக இடைவெளிகள் இல்லாமலும் மாணவ, மாணவிகள் அமர்ந்து இருந்தனர். அத்துடன் பெரும்பாலான மாணவ, மாணவிகள் முக கவசமும் அணியவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 2 தனியார் நீட் பயிற்சி மையங்களையும் பூட்டி தாசில்தார் ‘சீல்’ வைத்தார். இந்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story