முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மீட்புக்குழு தயார்: ‘நிவர்’ புயலுக்கு மக்கள் அச்சப்பட வேண்டாம் - கடலூர் கலெக்டர் பேட்டி
புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீட்புக்குழுவினர் தயாராக இருக்கிறார்கள். ஆதலால் ‘நிவர்’ புயல் பற்றி மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூறினார்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் ‘நிவர்’ புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. புயலை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் முதுநகர் சொத்திக்குப்பம், ராசாப்பேட்டை, சாமியார்பேட்டை, சின்னூர், முடசல் ஓடை மீன் இறங்குதளம், எம்.ஜி.ஆர். திட்டு ஆகிய இடங்களில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதி மீனவர்களிடம் புயல் பாதுகாப்பு மையங்களில் பாதுகாப்புடன் தங்க வேண்டும். தங்களின் மீன்பிடி வலைகள், படகுகள், என்ஜின்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
பின்னர் பரங்கிப்பேட்டை நெடுஞ்சாலைத்துறை பிரிவு அலுவலகத்தில் உள்ள மீட்பு உபகரணங்கள், பரங்கிப்பேட்டை மீன்வளத்துறை மூலம் இயங்கி வரும் வி.எச்.எப் கட்டுப்பாட்டு அறையை அவர் பார்வையிட்டார். இந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து 40 நாட்டிக்கல் மைல் சுற்றளவு வரை பேசக் கூடிய வகையில் நிறுவப்பட்டுள்ளது. புயல் மற்றும் அவசர காலங்களில் இந்த அதிக அலைவரிசை கொண்ட சாதனம் மூலம் கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியும். இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் 19 மண்டல அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மாவட்டத்தில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், பலவீனமாக உள்ள கூரை வீடுகளில் வசிப்போரையும் பாதுகாப்பாக தங்க வைக்க உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
கடலூர், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட கடலோர பகுதிகள் மட்டுமின்றி தாழ்வான மற்றும் பலவீனமாக உள்ள வீடுகளில் வசிக்கக்கூடிய 120 குடும்பங்களை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளோம். உள் மாவட்ட பகுதியான விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 100 குடும்பங்களையும் பாதுகாப்பாக தங்க வைக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.
மாவட்டத்தில் 164 ஜெனரேட்டர்கள் மற்றும் 1 லட்சம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் 70 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்படுத்தும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் உள்ள கடலோர பகுதிகளில் ஆட்டோ மற்றும் தண்டோரா மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். உங்கள் பகுதியில் தண்ணீர் தேங்கினாலோ அல்லது வீடுகள் பாதிக்கப்பட்டாலோ உடனடியாக அந்தந்த பகுதியில் உள்ள அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். பாதிக்கக்கூடிய இடங்களில் வசிக்கும் மக்களை அதிகாரிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்தால் உடனடியாக செல்ல வேண்டும். அங்கு மின்சாரம், உணவு, உடை மற்றும் அடிப்படை வசதிகள் தயார் நிலையில் இருக்கிறது. ‘நிவர்’ புயலால் யாரும் அச்சப்பட வேண்டாம். அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது. புயலை எதிர்கொள்ளவும் தயார் நிலையில் இருக்கிறோம்.
மண்டல அலுவலர்கள் அனைவரும் தற்போது பாதிப்பு ஏற்படும் இடங்களுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மாவட்டத்தில் 3,240 முதல் அறிக்கை தரக்கூடிய நபர்கள் தயார் நிலையில் உள்ளனர். இது தவிர உயிர்ச்சேதம் ஏற்படாத வகையில் 1,390 பேர் பாதுகாப்பு பணிக்காக தயார் நிலையில் உள்ளனர். உயிர்ச்சேதமோ, பயிர்ச்சேதமோ இருக் கக்கூடாது.
ஏற்கனவே பயிர்காப்பீடு செய்ய விவசாயிகளை அறிவுறுத்தி உள்ளோம். டெல்டா மற்றும் மற்ற பகுதிகளில் 2 நாட்கள் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். ஆகவே விவசாயிகள் பயிர்க்காப்பீட்டை செய்து முடிக்க வேண்டும். விடுபட்டவர்களும் சேர வேண்டும். விரைவில் தாழ்வான பகுதிகளில் வசிப்போர், பலவீனமாக உள்ள வீடுகளிலும் வசிப்போர் பாதுகாப்பாக புயல் பாதுகாப்பு மையங்களுக்கு வர வேண்டும். மாவட்டத்தில் ஏற்கனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 278 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அதில் அதிகம் பாதிக்கும் இடங்கள் 92 உள்ளது. இதை கருத்தில் கொண்டு தான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.
இவ்வாறு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூறினார்.
ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, சிதம்பரம் சப்-கலெக்டர் மதுபாலன், மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சந்தோஷ்குமார், உதவி பொறியாளர் ஜெகன் கார்த்திக், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கண்ணன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, தாசில்தார்கள் பலராமன், ஆனந்த் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story