காலி பணியிடங்களை நிரப்பக்கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் - திருவாரூரில் நடந்தது


காலி பணியிடங்களை நிரப்பக்கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் - திருவாரூரில் நடந்தது
x
தினத்தந்தி 25 Nov 2020 3:30 AM IST (Updated: 25 Nov 2020 7:09 AM IST)
t-max-icont-min-icon

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி திருவாரூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி உள்பட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகள், வழக்குகள், குற்ற குறிப்பாணை, தற்காலிக பணி நீக்கம், பணி இடமாறுதல் ஆகியவற்றை கைவிட வேண்டும். காலிப்பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தியதை திரும்ப பெற வேண்டும். கொரோனா தடுப்பு பணியாற்றிய டாக்டர்கள், மருந்தாளுனர்கள், லேப் டெக்னீசியன், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் சிறப்பு ஊதியத்தினை உடனடியாக வழங்கிட வேண்டும்.

21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாலை நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார்.

வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் அசோக், ஊரக வளர்ச்சி துறை சங்க மாவட்ட செயலாளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், வேளாண்மைத்துறை அமைச்சுப்பணியாளர் சங்கம் மாவட்ட தலைவர் சின்னையன், நன்றி கூறினார்.

Next Story