மாவட்ட செய்திகள்

பாலாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை + "||" + To the coastal people of the lake Flood risk warning

பாலாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பாலாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பாலாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, 

நிவர் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பாலாறு அணைக்கட்டில் இருந்து 42 ஆயிரம் கன அடி உபரிநீர் பாலாற்றில் வெளியேற்றப்படுகிறது. அந்த தண்ணீருடன் பாலாற்றின் கிளை நதியான வேகவதி மற்றும் செய்யாற்றில் மூலம் வெள்ளம் வந்து கொண்டிருப்பதால் பாலாற்றில் கூடுதலாக வெள்ளம் வருகிறது. இதன் காரணமாக பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழைய பாலத்தில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பாலாற்றின் கரையோரம் உள்ள செங்கல்பட்டு வட்டத்துக்குட்பட்ட மேலச்சேரி, பாலூர், வில்லியம்பாக்கம், ஆத்தூர், திம்மாவரம், பழவேலி, வேதநாராயணபுரம், ஒழலூர், திருக்கமுக்குன்றம் வட்டத்துக்குட்பட்ட மணப்பாக்கம், உதயம்பாக்கம், புளிப்பரன் கோவில், வள்ளிபுரம், விளாகம் எடையாத்தூர், இரும்புலிச்சேரி, அட்டவட்டம், தண்டரை, பொய்கைநல்லூர், பூஞ்சேரி, வாயலூர், புதுப்பட்டினம், பாலாறு வலது கரை மதுராந்தகம் வட்டத்துக்குட்பட்ட பிளாப்பூர், மெய்யூர், மாமண்டூர், பழமத்தூர், பழையனூர், படாளம், புலிப்பரன் கோவில், பள்ளிப்பட்டு, பூதூர், ஈசூர், நீலமங்களம், நெல்வாய், சேவூர், மடவிளாகம், தண்டரை, செய்யூர் வட்டத்துக்குட்பட்ட பரமேஸ்வரமங்களம், கடலூர், சின்னகுப்பம், எடையாத்தூர், இரும்புலிச்சேரி போன்ற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம். ஆற்றை கடக்க வேண்டாம்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் வாலாஜாபாத் வட்டம் தென்னேரி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் தென்னேரி ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியது. இதனால் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதன் காரணமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் அகரம், கட்டவாக்கம், மடவிளாகம், விளாகம், அளவூர், வாரணவாசி, தாழையம்பட்டு, தேவரியம்பாக்கம், தொள்ளாழி, தோனாங் குளம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பனையூர், எழிச்சூர், பூண்டி, கண்ணடியான்பாளையம், குருவன்மெடு, வேண்பாக்கம், ரெட்டிபாளையம், சாஸ்திரம்பாக்கம், ஆத்தூர் வடகால், காந்தலூர், புலிப்பாக்கம், திம்மாவரம் மற்றும் செங்கல்பட்டு நகர பகுதி, மகாலட்சுமி நகர் போன்ற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் யாரும் நீஞ்சல் மடுவில் இறங் கவோ, மடுவினை கடக்கவோ, குளிக்கவோ, துணி துவைக் கவோ இறங்க வேண்டாம்.

இதுபோல செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவை தற்போது அடையும் நிலையில் உள்ளது. இதனால் ஏரிக்கு வரும் மழைநீர் உபரி நீராக ஏரியின் கலங்கல் மூலம் கிளியாற்றில் வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக உபரி நீர் செல்லும் கிளியாற்றை ஒட்டிய கரையோர கிராமங்களை சேர்ந்த கத்திலிச்சேரி, விழுதமங்கலம், வளர்பிறை, முள்ளி, முன்னுத்திக்குப்பம், முருக்கஞ்சேரி, குன்னத்தூர், நீலமங்கலம், கருங்குழி, இருசமநல்லூர், பூதூர், ஈசூர் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறது.

இந்த தகவலை நீர்வள ஆதார துறை செயற்பொறியாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் பொண்ணை தடுப்பணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் காஞ்சீபுரம் பாலாற்றில் 3 அடிக்கு மேல் தண்ணீர் கரை புரண்டு சென்று கொண்டிருக்கிறது. இதனால் காஞ்சீபுரம் பாலாற்றில் கரையோரம் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள தரைப்பாலம் முழுமையாக மூழ்கி 3 அடி அளவுக்கு தண்ணீர் ஓடி கொண்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

2017-ம் ஆண்டுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் அதை காண ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர். பொதுமக்கள் அதிக அளவில் கூடியதால் பாலாற்று மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆபத்தை உணராமல் சிலர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

தொடர்ந்து பாலாற்றின் கரையோர பகுதிகளை கண்காணிக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி முத்துராமலிங்கம் தலைமையில் வருவாய்த்துறையினரும், பொதுப்பணித்துறையினரும் கண்காணித்து வருகின்றனர்.