கொள்ளிடம் அருகே, மழை நீர் வடிய வழியின்றி தர்காஸ் கிராமத்தில் 20 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது - நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
கொள்ளிடம் அருகே தற்காஸ் கிராமத்தில் மழைநீர் வடிய வழியின்றி 20 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.
கொள்ளிடம்,
கடந்த சில தினங்களுக்கு முன்பு நிவர் புயல் காரணமாக கொள்ளிடம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் கொள்ளிடம் அருகே தர்காஸ் கிராமத்தில் 20 ஏக்கர் சம்பா நடவு நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது.
ஒன்று அல்லது இரண்டு நாளில் வயல்களில் தேங்கிய மழைநீர் வடியும் என்று அங்குள்ள விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் தேங்கிய நீர் நெற்பயிரை மூழ்கடித்தது. தேங்கிய மழைநீர் வடிவதற்கான வசதி இல்லை. காரணம் அந்த பகுதியில் சூரியன் பள்ளம் வடிகால் வாய்க்கால் சரிவர தூர்வராததால் தண்ணீர் வெளியேற வசதியின்றி வயல்களில் தண்ணீர் தேங்கி விட்டது.
மேலும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அங்குள்ள கிட்டி அணை உப்பாற்றின் கரையை பலப்படுத்தும் போது அந்த பகுதியில் தேங்கிய நீரை ஆற்றுக்குள் வடியும் வகையில் இருந்த ஏழு வடிகால் வாய்க்கால்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு விட்டன. இதனால் தேங்கிய மழை நீர் வடிய முடியாமல் இன்னும் வயலில் தேங்கி கிடக்கிறது. இதனால் சம்பா நடவு பயிர் முற்றிலும் அழுகி விட்டது.
இதுகுறித்து தற்காஸ் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பாஸ்கரன், விஜய கோதண்டராமன், கோவிந்து ரெங்கநாதன், விஜயரங்கன் ஆகியோர் கூறுகையில், இந்த பகுதியில் வயல்களில் மழை காலத்தில் தண்ணீர் அதிகம் தேங்கினால் உடனடியாக கிட்டி அணையில் உள்ள வடிகால் மூலம் நீர் முழுமையும் வெளியேறி விடும். ஆனால் கிட்டி அணை, உப்பனாற்றின் கரையை பலப்படுத்தும் போது வடிகாலாக இருந்த ஏழு வாய்க்கால்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு விட்டது. இதனால் வயலில் தேங்கிய மழைநீர் வடியாமல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி விட்டன.
வயல்களில் அளவுக்கு அதிகமாக தேங்கிய மழைநீர் உடனடியாக வடியும் என்று எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் தண்ணீர் வடியவில்லை. இதனால் 20 ஏக்கர் சம்பா நடவு நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி அழுகி விட்டது. எனவே விவசாயிகளின் நலன் கருதி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story