ஏரியூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்ட பா.ம.க. இணையவழி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்


ஏரியூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்ட பா.ம.க. இணையவழி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 27 Nov 2020 10:00 PM GMT (Updated: 28 Nov 2020 4:00 AM GMT)

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஏரியூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்ட பா.ம.க. இணையவழி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பென்னாகரம்,

பென்னாகரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பா.ம.க. முப்படையை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் இணையவழி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் வரவேற்று பேசினார். கட்சியின் இணை பொதுச்செயலாளர் இசக்கி படையாட்சி, மாநில அமைப்பு செயலாளர் செல்வகுமார், மாநில துணைத்தலைவர்கள் சாந்தமூர்த்தி, பாடி செல்வம், உழவர் பேரியக்கம் மாநில செயலாளர் வேலுசாமி, மாவட்ட செயலாளர்கள் பெரியசாமி, சத்தியமூர்த்தி, இளைஞர் சங்க மாநில செயலாளர் முருகசாமி, வன்னியர் சங்க மாநில செயலாளர் அரசாங்கம், மாவட்ட தலைவர் இமயவர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் டாக்டர் அன்புமணி ராமதாசின் முப்படை அமைப்பின் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். இதற்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பதில் அளித்து பேசினார்.

இந்த கலந்துரையாடலில், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் போன்று ஏரியூர் பகுதியில் வசிக்கும் 70 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் நாகமரை ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வர, ஏரியூர் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். ஏழை மாணவ-மாணவிகளின் நலன் கருதி ஏரியூரில் அரசு கல்லூரி தொடங்க வேண்டும். ஒட்டனூரில் இருந்து கோட்டையூர் செல்ல, ஆற்றை கடக்க வசதியாக உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும்.

ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பென்னாகரம் பகுதியை மையமாக கொண்டு பென்னாகரத்தில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். பென்னாகரம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்.

பென்னாகரம் தொகுதியில் பிலிகுண்டுலு மற்றும் கோடுப்பட்டியில் பெரிய அளவிலான அணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை சர்வதேச அளவிலான சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். பென்னாகரம் போடூர் முதல் கோவில்பள்ளம் வழியாக கேரட்டி வரை பொதுமக்களின் நலன் கருதி பழுதடைந்த பாலங்களையும், தார் சாலைகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் பென்னாகரம் ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், பா.ம.க. இளைஞரணி துணை தலைவர்கள் சத்தியமூர்த்தி, மந்திரி படையாட்சி, மாவட்ட கவுன்சிலர் மாது, தொகுதி அமைப்பு செயலாளர் சுதா கிருஷ்ணன், முன்னாள் மாவட்ட செயலாளர் சண்முகம், மாநில நிர்வாகி செந்தில், ஊராட்சி மன்ற தலைவர்கள் மணி, முத்துசாமி, பிரகாஷ், மாணிக்கம், ஒன்றிய குழு உறுப்பினர் சேகர், ஏரியூர் ஒன்றிய பா.ம.க. செயலாளர்கள் ஜெகதீசன், ராசா உலகநாதன், நிர்வாகிகள் சட்டநாதன், சத்திரிய கண்ணன், பென்னாகரம் நகர பொறுப்பாளர் ஜீவா, பங்க் ராஜா, சந்தோஷ் குட்டி, தமிழ்ச்செல்வி, பாலமுருகன், குமார், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தலைவர் செல்வகுமார் நன்றி கூறினார்.

Next Story