மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: மேல்புறத்தில் காங்கிரசார் ஏர் கலப்பையுடன் பேரணி


மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: மேல்புறத்தில் காங்கிரசார் ஏர் கலப்பையுடன் பேரணி
x
தினத்தந்தி 29 Nov 2020 3:44 AM GMT (Updated: 29 Nov 2020 3:44 AM GMT)

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்புறத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஏர்கலப்பையுடன் பேரணி சென்றனர். போலீசார் தடுத்ததால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

களியக்காவிளை,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்றும், அவற்றை திரும்பப்பெற வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியினர் ஏர் கலப்பையுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். மார்த்தாண்டத்தை அடுத்த மேல்புறம் சந்திப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிவித்து இருந்தார்.

அதன்படி நேற்று மாலையில் மேல்புறம் சந்திப்பில் ஏராளமான காங்கிரசார் மாட்டு வண்டிகளுடன் அங்கு திரண்டனர். அந்த பகுதியில் மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் மேல்புறம் சந்திப்பில் இருந்து குழித்துறையை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

3 எம்.எல்.ஏ.க்கள்

போராட்டத்திற்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் மோகன்தாஸ், சதீஷ், அருள்ராஜ், குமார், பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்ஸ் சிறப்புரையாற்றினார். பேரணியை விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. விஜயதரணி தொடங்கி வைத்தார்.

பேரணி தொடங்கியதும் விவசாயிகளின் அடையாளமான பச்சை துண்டை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலையில் கட்டிக் கொண்டும், ஏர் கலப்பையை தோளில் சுமந்து கொண்டும் பேரணியில் சென்றார். சிறிது தூரம் சென்றதும் அனுமதியின்றி போராட்டம் நடத்துவதாக கூறி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். உடனே 3 எம்.எல்.ஏ.க்கள் உள்பட காங்கிரஸ் கட்சியினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதில் ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் சாமுவேல் ஜார்ஜ், மேல்புறம் யூனியன் கவுன்சிலர் ரவிசங்கர், காங்கிரஸ் சேவாதள மாவட்ட தலைவர் ஜோசப் தயாசிங், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், விளவங்கோடு பஞ்சாயத்து தலைவி லைலா ரவிசங்கர், மாவட்ட கவுன்சிலர் அம்பி, மகிளா காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவி சர்மிளா ஏஞ்சல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டம் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

300 பேர் கைது

இதையடுத்து காங்கிரசாரிடம் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், விஜயதரணி மற்றும் 70 பெண்கள் உள்பட 300 பேரை கைது செய்து அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நடந்த இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story