சிவகங்கையில் உடையும் நிலையில் இருந்த 4 கண்மாய்கள் சீரமைப்பு - ஒன்றிய ஆணையாளர் தகவல்


சிவகங்கையில் உடையும் நிலையில் இருந்த 4 கண்மாய்கள் சீரமைப்பு - ஒன்றிய ஆணையாளர் தகவல்
x
தினத்தந்தி 29 Nov 2020 5:30 PM IST (Updated: 29 Nov 2020 5:15 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் உடையும் நிலையில் இருந்த 4 கண்மாய்கள் சீரமைக்கப்பட்டன என்று ஒன்றிய ஆணையாளர் தகவல் தெரிவித்து உள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை ஊராட்சி ஒன்றிய கூட்டம் ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலச்சந்திரன் தலைமையில் நடந்தது. கூட்டத்துக்கு துணைத்தலைவர்கேசவன் முன்னிலை வகித்தார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பழனியம்மாள் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் பத்மாவதி பேசும் போது:-

சிவகங்கை ஒன்றிய பகுதிகளில் விவசாயத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீர் இதுவரை வழங்கவில்லை. நமக்கு உரிய தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும். பெரியாறு தண்ணீரை சிவகங்கை மாவட்டத்திற்கு பெற்று தருவதற்கு தனியாக ஒரு சப்-டிவிசனை ஏற்படுத்த வேண்டும். ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்து ஆணையாளர் பழனியம்மாள் கூறும் போது:- இந்த கோரிக்கைகளை மன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி கலெக்டருக்கு அனுப்புவோம் என்றார்.

ஒன்றிய கவுன்சிலர் கருப்பணன்:-

ஒன்றிய கூட்டத்திற்கு அதிகாரிகளை வரவழைக்க வேண்டும். இடையமேலூர் பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் கிராமங்களில் மஸ்தூர் பணியாளர்கள் பணிக்கு வருவதில்லை. கடந்த 2017-2018 மற்றும் 2018-2019-ம் ஆண்டுகளில் அரசு பணிகளுக்கு ஒப்பந்தம் பெற்றவர்கள் அந்த பணிகளை செய்யவே இல்லை. எனவே அந்த டெண்டரை ரத்து செய்துவிட்டு வேறு டெண்டர் விட வேண்டும்.

பழனியம்மாள்:- ஏற்கனவே அந்த 2 வருடமும் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்களுக்கு 15 நாட்களில் பணிகளை தொடங்கவில்லை என்றால் டெண்டர் ரத்து செய்யப்படும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கேசவன் (துணைத்தலைவர்):- என்னுடைய கவுன்சிலுக்குட்பட்ட வாணியன்குடி கண்மாய் மற்றும் கடம்பன்குடி கண்மாய் ஆகியவை நிரம்பி உடையும் அபாய நிலையில் உள்ளது. உடனடியாக அதை சரி செய்ய வேண்டும்.

பழனியம்மாள்(ஆணையாளர்):-சிவகங்கை ஒன்றியத்தில் மொத்தம் 4 கண்மாய்கள் நிரம்பி உடையும் நிலையில் இருந்தது. அவை தற்போது சீரமைக்கப்பட்டு விட்டது.

அம்சவள்ளி(ஒன்றிய கவுன்சிலர்):-

ஒக்குபட்டி கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மிகவும் பழுதடைந்துள்ளது. அதைசரி செய்ய வேண்டும்.தேவன்கோட்டை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி கட்டிடமும் மிகவும் சேதமடைந்துள்ளது. தொடர்ந்து பல்வேறு பொருட்களின் மீது விவாதம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆணையாளர் பழனியம்மாள் பேசும் போது:-

தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. எனவே ஒன்றிய கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டாலோ அல்லது கண்மாய்கள் நிரம்பி உடையும் நிலையில் இருந்தாலோ அது பற்றி உடனடியாக கட்டுப்பாட்டு அறை எண் 1077-க்கு தகவல் தெரிவிக்கலாம்.உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன் நன்றி கூறினார்.

Next Story