குலசேகரன்பட்டினம் அருகே ரூ.4 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் அண்ணன்-தம்பி கைது


குலசேகரன்பட்டினம் அருகே ரூ.4 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் அண்ணன்-தம்பி கைது
x
தினத்தந்தி 29 Nov 2020 11:15 PM GMT (Updated: 29 Nov 2020 7:04 PM GMT)

உடன்குடி அருகே, ரூ.4 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்களை குலசேகரன்பட்டினம் போலீசார் கைப்பற்றினார். இது தொடர்பாக அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.

குலசேகரன்பட்டினம்,

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள தேரியூர் வடக்கு தெருவில் நேற்று காலையில் குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் தலைமையில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி அந்த வழியாக வந்த மினி வேனை மடக்கி பிடித்து சோதனை நடத்தினர்.

இச்சோதனையில் தமிழக அரசினால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வேனில் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. வேனில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வேனில் இருந்த 4 பேரில் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட 2 பேர் மற்றும் புகையிலை பொருட்களுடன் வேனை குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், பிடிபட்ட 2 பேர் தேரியூர் வடக்கு தெருவைச் சேர்ந்த முருகன் மகன்களான சித்திரைசெல்வன் (வயது29), மோகன்ராஜ் (27) என தெரிய வந்தது. தப்பி ஓடியவர்கள் அதே ஊரை சேர்ந்த தர்மலிங்கம் மகன் செல்வகுமார் (35), தேரியூர் கீழத்தெருவைச் சேர்ந்த காசி மகன் ராஜலிங்கம் (45) ஆகியோர் எனவும் தெரிந்தது. விசாரணைக்கு பின் அண்ணன், தம்பிகளான சித்திரைசெல்வன், மோகன்ராஜ் ஆகியோரை குலசேகரன்பட்டினம் போலீசார் கைது செய்தனர்.

தகவல் அறிந்த திருச்செந்தூர் போலீஸ் உதவி சூப்பிரண்டு ஹர்ஸ்சிங் குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட் களை பார்வையிட்ட பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள 2 பேரும், கூட்டாளிகளுடன் சேர்ந்து மளிகை கடைகளுக்கு பிஸ்கட், சாக்லெட் மற்றும் குழந்தைகளின் தின்பண்டங்கள் ஆகியவற்றை விற்பனை செய்து வந்துள்ளனர். இந்த பொருட்களுடன் குட்கா, பான்பராக் போன்ற தமிழக அரசு தடைசெய்துள்ள புகையிலை பொருட்களையும் விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் அந்த வேனை மடக்கிப்பிடித்து சோதனை நடத்தியில் 410 கிலோ எடையுள்ள ரூ.4 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்கு பயன்படுத்திய மினி வேனும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அண்ணன், தம்பிகளான சித்திரைசெல்வன், மோகன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தப்பி ஓடிய செல்வகுமார், ராஜலிங்கம் ஆகிய 2 பேரை தேடிவருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story