ஆழ்வார்திருநகரியில் காபி குடிக்கும் கோவில் யானை - பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்


ஆழ்வார்திருநகரியில் காபி குடிக்கும் கோவில் யானை - பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்
x
தினத்தந்தி 30 Nov 2020 5:30 AM IST (Updated: 30 Nov 2020 12:55 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்திருநகரியில் காபி குடிக்கும் கோவில் யானையை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

தென்திருப்பேரை, 

தூத்துக்குடி மாவட்டத்தில் நவ திருப்பதி கோவில்களில் கடைசி தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ‘ஆதிநாயகி‘ யானை உள்ளது. கோவில் வளாகத்தில் இந்த யானையை பாகன் பராமரித்து வருகிறார்.

இதேபோன்று திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ‘குமுதவல்லி‘ யானை, இரட்டை திருப்பதி அரவிந்த லோசனர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ‘லட்சுமி‘ யானை ஆகியவற்றையும் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் வளாகத்திலேயே பாகன்கள் பராமரித்து வருகின்றனர்.

‘ஆதிநாயகி‘ யானையை தினமும் காலையில் பாகன் நடைபயிற்சிக்கு அழைத்து செல்வது வழக்கம். இதேபோன்று மற்ற 2 யானைகளும் தினமும் காலையில் பாகன்களுடன் நடைபயிற்சியாக அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று பெருமாளை தரிசித்து வருவது வழக்கம்.

நடைபயிற்சிக்கு பாகனுடன் புறப்பட்டு செல்லும் ‘ஆதிநாயகி‘ யானையானது, கோவில் அருகில் உள்ள ரத வீதிகள், பஜார், மெயின் ரோடு வழியாக சென்று மீண்டும் கோவிலுக்கு திரும்பும். நடைபயிற்சியின்போது மேல பஜாரில் உள்ள காபி கடையில் பாகன் காபி குடிப்பது வழக்கம். அப்போது நன்கு ஆற்றப்பட்டு சூடு குறைந்த காபியை வாங்கி யானைக்கும் கொடுக்கிறார். அதனை யானை ஆர்வத்துடன் விரும்பி பருகுகிறது.

தினமும் காலையில் ‘ஆதிநாயகி‘ யானை அந்த கடையில் காபி அருந்த தவறுவது இல்லை. யானை காபி குடிப்பதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.


Next Story