கொரோனா பரவலை தடுக்க அரசின் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்; திருமண மண்டப உரிமையாளர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
கொரோனா பரவலை தடுக்க அரசின் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று திருமண மண்டப உரிமையாளர்களுக்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், திருமண மண்டப உரிமையாளர்களுக்கு கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். பின்னர் அவர் கூறுகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை ஒருங்கிணைந்து எடுத்த நடவடிக்கையால் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. திருமண மண்டப உரிமையாளர்கள் திருமணங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடத்தும் முன்பும், நிகழ்ச்சிகள் முடிந்த பிறகும் மண்டபங்களை சுத்தப்படுத்தி கிருமி நாசினி தெளித்து, பிளிச்சிங் பவுடர் போட வேண்டும். திருமண மண்டபங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் சமையலர்கள் முக கவசம் அணிய வேண்டும்.
முன்பதிவு
திருமணங்கள் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யும் போதே, அரசு அறிவித்த நெறிமுறைகளின்படி, சுபநிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும் சமூக இடைவெளியை கடைபிடித்தல், கிருமி நாசினி உபயோகித்தல், முக கவசம் அணிதல் மற்றும் அவ்வப்போது சோப்பு நீரால் கைகளை கழுவுதல் போன்ற விழிப்புணர்வு பதாகைகளை திருமண மண்டபங்களில் ஆங்காங்கே கண்டிப்பாக வைக்க வேண்டும்.
காலை மற்றும் மாலை வேளைகளிலும் கிருமி நாசினி கொண்டு குளியலறை, கழிவறை மற்றும் தரைத்தளங்கள் ஆகியவற்றை சுத்தப்படுத்த வேண்டும். நாற்காலிகள், கதவுகள், கதவு தாழ்ப்பாள்கள் மற்றும் உணவருந்தும் மேசைகள் போன்றவற்றையும் சுத்தப்படுத்த வேண்டும். சோப்பு, கிருமி நாசினி போன்றவற்றை குளியல் அறைகள் மற்றும் கழிவறைகளில் கண்டிப்பாக வைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அபராதம் விதிப்பு
திருமண மண்டபங்களில் எச்சில் மற்றும் சளி துப்பினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மண்டபங்களில் மழைநீர் தேங்காத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கண்டிப்பாக எடுக்க வேண்டும். குடிநீர் தொட்டிகளை அவ்வப்போது சுத்தப்படுத்தி, குளோரினேஷன் செய்து குடிநீர் வழங்க வேண்டும். சுப நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள் மீது கொரோனா கண்காணிப்பு குழு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கார்த்திகேயன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், பேரிடர் மேலாண்மை தாசில்தார் ஆனந்த் மற்றும் அரசு அலுவலர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story