கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்தக்கோரி நாம் தமிழர் கட்சியினர் தர்ணா


கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்தக்கோரி நாம் தமிழர் கட்சியினர் தர்ணா
x
தினத்தந்தி 1 Dec 2020 6:55 AM IST (Updated: 1 Dec 2020 6:55 AM IST)
t-max-icont-min-icon

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்தக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்,

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திங்கட்கிழமைதோறும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். தற்போது கொரோனா பரவலால் மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் பொருட்டு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க அந்தந்த தாலுகா அலுவலகங்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் கரூர் கலெக்டர் அலுவலகத்திலும் புகார் பெட்டி வைத்து அதில் மனுக்களை போட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

நாம் தமிழர் கட்சியினர் தர்ணா

கரூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் நன்மாறன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் வருகிற 4-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தஞ்சை பெரியகோவிலில் தமிழில் கும்பாபிஷேக விழா நடைபெற்றதை போல, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலிலும் கும்பாபிஷேகம் தமிழில் நடத்த வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நாம் தமிழர் கட்சியினர் புகார் பெட்டியில் மனுவை போட்டு விட்டு சென்றனர். .

பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

கரூர் மாவட்ட பகுதி நேர ஆசிரியர்கள் சார்பில் போட்ட மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 2011-12-ம் கல்வியாண்டில் பணியமர்த்தப்பட்டு, உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி (கணினி அறிவியல், தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன்கல்வி) ஆகிய கல்வி இணைச்செயல்பாடுகளை இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறோம். தற்போது 10-வது கல்வியாண்டு நடக்கிறது. ஊதிய உயர்வு 3-வது கல்வியாண்டில் ரூ.2 ஆயிரமும், 6-வது கல்வியாண்டில் ரூ.700 வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஊதியம் உயர்த்தப்படவில்லை.

இந்த ரூ.7,700 தொகுப்பூதியத்தில் விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாமல் கஷ்டப்படுகின்றோம். கடந்த 9 வருடமாக மே மாதம் சம்பளம் வழங்கவில்லை. இதனால் ஒவ்வொருவரும் ரூ.60 ஆயிரத்தை இழந்து தவிக்கின்றோம். போனஸ், பண்டிகை முன்பணம், 7-வது ஊதியக்குழு 30 சதவீத ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு, மருத்துவ விடுப்பு, வருங்கால வைப்பு, இ.எ.ஸ்.ஐ. இதுவரை வழங்கவில்லை. எனவே எங்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

அரசு பணி நியமனம்

2013-ம் ஆண்டில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போட்ட மனுவில், 2013-ம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று, கடந்த 7 ஆண்டுகளாக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு அரசு பணி வழங்கி உதவ வேண்டும். அரசு பள்ளிகளில் ஆசிரியராக சேர அதிகபட்ச வயது 40 என்பதை தமிழக அரசு நீக்கம் செய்து, என்.சி.டி.இ. அறிவித்ததை இதற்கு முன்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என்று அரசு ஆணை வழங்கி உதவ வேண்டும்.

அரசு பள்ளிகளில் அதிகமான மாணவர்களின் சேர்க்கை உள்ளபோது, புதிய வேலை வாய்ப்பு உருவாக்கம் செய்து பணி நியமனம் வழங்க உதவ வேண்டும். 2013-ம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் வயது முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்ய ஆவனம் செய்து உதவ வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Next Story