58 கிராம கால்வாய் திட்டத்தில் தண்ணீர் திறக்க நிரந்தர அரசாணை கோரி பார்வர்டு பிளாக் ஆர்ப்பாட்டம் - கூட்டணி கட்சியினர் பங்கேற்பு


58 கிராம கால்வாய் திட்டத்தில் தண்ணீர் திறக்க நிரந்தர அரசாணை கோரி பார்வர்டு பிளாக் ஆர்ப்பாட்டம் - கூட்டணி கட்சியினர் பங்கேற்பு
x
தினத்தந்தி 2 Dec 2020 10:45 AM GMT (Updated: 2 Dec 2020 11:39 AM GMT)

58 கிராம கால்வாய் திட்டத்தில் தண்ணீர் திறந்து விட நிரந்தர அரசாணை வெளியிட வலியுறுத்தி பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி பகுதியில் 58 கிராம கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டு 2 முறை சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த 58 கிராம கால்வாய் திட்டத்தில் தண்ணீர் திறந்துவிட நிரந்தர அரசாணை வெளியிட வலியுறுத்தி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் உசிலம்பட்டி தேனி ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவன் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜா, மாநில செயலாளர் பாஸ்கர பாண்டிய ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர்கள் சுதந்திரம், ஜெயச்சந்திரன், சுதாகரன், மாவட்ட ஊராட்சிகளின் துணைத்தலைவர் செல்லம்பட்டி முத்துராமன், உசிலம்பட்டி நகர் செயலாளர் தங்கமலைபாண்டி, ம.தி.மு.க. சார்பில் நகர் செயலாளர் ஜெயக்குமார், காங்கிரஸ் சார்பில் நகர தலைவர் மகேந்திரன், மாவட்ட பொருளாளர் தீபா பாண்டி, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஒன்றிய செயலாளர் தங்கமலை மற்றும் அக்கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் 58 கிராம கால்வாய் பாசன விவசாயிகளும் கலந்து கொண்டனர். 58 கிராம கால்வாய் திட்டத்தில் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்ட முடிவில் ஊர்வலமாக சென்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Next Story