குடும்பத்தை போன்று பொதுமக்களையும் போலீசார் பாதுகாக்க வேண்டும் - ஏ.டி.ஜி.பி. ஆபாஷ்குமார் பேச்சு


குடும்பத்தை போன்று பொதுமக்களையும் போலீசார் பாதுகாக்க வேண்டும் - ஏ.டி.ஜி.பி. ஆபாஷ்குமார் பேச்சு
x
தினத்தந்தி 2 Dec 2020 9:15 PM IST (Updated: 2 Dec 2020 9:08 PM IST)
t-max-icont-min-icon

போலீசார் தங்கள் குடும்பத்தை போன்று பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டும் என்று வேலூரில் நடந்த 2-ம்நிலை பெண் காவலர் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி. ஆபாஷ்குமார் கூறினார்.

வேலூர்,

தமிழக காவல்துறையில் 2-ம் நிலை காவலர் எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆண்-பெண் காவலர்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் 6 மாத பயிற்சி அளிக்கப்பட்டது. அதன்படி வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, மதுரை ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 284 பெண் காவலர்கள் பயிற்சி பெற்றனர். இதில், சட்டப்பிரிவு, கவாத்து, கமாண்டோ, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் பயிற்சி நிறைவடைந்ததையடுத்து வேலூர் கோட்டையில் உள்ள கவாத்து மைதானத்தில் நேற்று மாலை அணிவகுப்பு நடைபெற்றது. வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் விஜயகுமார் வரவேற்றார்.

இதில், சிறப்பு அழைப்பாளராக பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி. ஆபாஷ்குமார் கலந்து கொண்டு பயிற்சியின் போது கவாத்து, சட்டப்பிரிவு, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:-

பெண்கள் சக்தி படைத்தவர்கள். தமிழக காவல்துறையில் பெண்களுக்கு 30 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாலுகா அளவில் மகளிர் போலீஸ் நிலையங்கள் உள்ளன. வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்று கிடையாது. நாட்டிற்கு முன்மாதிரியாக தமிழக காவல்துறை திகழ்கிறது. பயிற்சி முடித்து பணிக்கு செல்லும் போலீசார் காவல்துறையின் நன்மதிப்பை நிலைநாட்ட வேண்டும்.

பெண்கள், குடும்பத்தினர் மீது அதிக கவனம் செலுத்துவார்கள். அதேபோன்று நாட்டின் மீதும் கவனம் செலுத்த வேண்டும். போலீசார் தங்கள் குடும்பத்தை போன்று பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டும். இங்கு பயிற்சி பெற்ற பெண் காவலர்களின் பணி சிறக்க வாழ்த்து தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கராத்தே, கண்களில் கருப்புத்துணியை கட்டிக்கொண்டு துப்பாக்கியை கழற்றி மீண்டும் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், வேலூர் காவலர் பயிற்சி பள்ளி பயிற்சியாளர்கள் கனிமொழி (சட்டம்), குமார் (கவாத்து) மற்றும் 2-ம்நிலை காவலர்களின் பெற்றோர், உறவினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் காவலர் பயிற்சி பள்ளி துணை முதல்வர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Next Story