புயல், மழையால் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க 195 முகாம்கள் தயார்; அணை-குளங்கள் தொடர்ந்து கண்காணிப்பு


நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கண்காணிப்பு அதிகாரி கருணாகரன் தலைமையில் புயல் எதிர்கொள்வது குறித்து ஆலோசனை
x
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கண்காணிப்பு அதிகாரி கருணாகரன் தலைமையில் புயல் எதிர்கொள்வது குறித்து ஆலோசனை
தினத்தந்தி 2 Dec 2020 10:35 PM GMT (Updated: 2 Dec 2020 10:35 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க 195 முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அணைகள், குளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

ஆய்வு கூட்டம்
‘புரெவி‘ புயல் காரணமாக நெல்லை மாவட்டத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கை முழு வீச்சில் நடந்து வருகின்றன.

இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரியும், முன்னாள் நெல்லை மாவட்ட கலெக்டருமான கருணாகரன், நெல்லை மாவட்ட பேரிடர் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று புயல் மற்றும் மழை வெள்ள எச்சரிக்கை முன்னேற்பாடுகள் குறித்த அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தை நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடத்தினார். கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் விஷ்ணு முன்னிலை வகித்தார்.

தீவிரமாக கண்காணிக்க வேண்டும்
கூட்டத்தில் பேரிடர் கண்காணிப்பு அதிகாரி கருணாகரன் பேசுகையில், “புயல், மழை, வெள்ளம் முன்னெச்சரிக்கை காரணமாக அரசு அலுவலர்கள் யாரும் விடுமுறை எடுக்க வேண்டாம். அவசர உதவிக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ள கலெக்டர் அலுவலகம் மற்றும் உதவி கலெக்டர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்திற்காக பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். அனைத்து அதிகாரிகளும் தொடர்பில் இருக்க வேண்டும். ஏதாவது அவசர தேவை ஏற்பட்டால் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம்“ என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணன், உதவி கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராச்சலம், உதவி கலெக்டர் (பயிற்சி) அலமேலுமங்கை, நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், நெல்லை மருத்துவக்கல்லூரி டீன் ரவிச்சந்திரன், மாநகராட்சி உதவி ஆணையாளர்கள் அய்யப்பன், சுகி பிரேமலா, பேரிடர் மேலாண்மை தாசில்தார் அபிபூர் ரஹ்மான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து பேரிடர் கண்காணிப்பு அதிகாரி கருணாகரன் கூறியதாவது:-

புயல் பாதுகாப்பு மையங்கள்
நெல்லை மாவட்டத்தில் புயல், மழை, வெள்ளம் தொடர்பாக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தேன். அனைத்து முன்னேற்பாடுகளும் நல்ல முறையில் செய்யப்பட்டுள்ளன. கடலோர கிராமங்களில் புயல் பாதுகாப்பு மையங்கள் அனைத்தும் புனரமைக்கப்பட்டு எந்த சூழலிலும் பயன்படுத்தும் வகையில் தயார் நிலையில் உள்ளது. அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, குடிநீர் வசதி, உணவு வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தேசிய பேரிடர் மீட்பு படையினர் 3 குழுக்களை சேர்ந்த 60 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாளையங்கோட்டை, அம்பை மற்றும் கடலோர கிராமங்களுக்கு அனுப்பப்பட்டு 3 இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டு, போதுமான மருந்துகளும் இருப்பில் உள்ளன. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் தயார் நிலையில் உள்ளனர். எந்த நேரத்திலும் போலீசார், தீயணைப்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

195 முகாம்கள் தயார்
வெள்ளம் ஏற்பட்டால் பயிர் பாதுகாப்பிற்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது? என அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளன. அனைத்து ஏற்பாடுகளும் திருப்தியாக உள்ளது. பாபநாசம், மணிமுத்தாறு அணைகளை பொதுப்பணித்துறையினர் மூலம் கண்காணித்து வருகிறோம். பெரிய குளங்கள், சிறிய குளங்கள் அனைத்தும் நிரம்புவதற்கும், நிரம்பிய பிறகு வடிகால் மூலம் தண்ணீரை வெளியேற்றவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஊரக வளர்ச்சித்துறை மூலம் அனைத்து குளங்கள் தூர்வாரப்பட்டு உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் 87 இடங்கள் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இதில் 11 இடங்கள் மிக தாழ்வானதாகவும், 32 இடங்கள் அதிக பாதிப்பு உள்ளாகும் பகுதிகளாகவும், 11 இடங்கள் மிக அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதியாகவும், 13 இடங்கள் மிதமான பாதிப்பு ஏற்படும் பகுதியாகவும், 31 இடங்கள் லேசான பாதிப்பு ஏற்படும் பகுதிகளாகவும் கண்டறியப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் இருந்து மீட்கும் பொதுமக்களை தங்க வைக்க 188 இடங்களில் முகாம்களும், 7 பல்நோக்கு மையங்களும் தயாராக உள்ளன.

தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கடலோர பகுதிகளில் 7 முகாம்களில் 8 ஆயிரம் பேரையும், பிற பாதுகாப்பு முகாம்களில் 50 ஆயிரம் பேரையும் தங்க வைக்க முடியும். பாதுகாப்பு முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்ட உடனே காய்ச்சல் பரிசோதனை தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெரியகுளம் கண்காணிப்பு
முன்னதாக பேரிடர் கண்காணிப்பு அதிகாரி கருணாகரன் பல்வேறு பகுதிகளுக்கு சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டார். அதன்படி நாங்குநேரி பெரியகுளம், வடக்கு விஜயநாராயணம் பெரியகுளத்தை பார்வையிட்டார்.

பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர் மணிகண்டராஜன், திசையன்விளை தாசில்தார் ரகுமத்துல்லா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரன், கருணாவதி மற்றும் அதிகாரிகள் பலர் உடன் சென்றனர்.

மேலும் நெல்லை மாவட்டத்தில் கூட்டப்புளி, பெருமணல் உள்ளிட்ட 10 கடற்கரை கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள 7 புயல் பாதுகாப்பு மையங்களை, பேரிடர் கண்காணிப்பு அதிகாரி கருணாகரன் பார்வையிட்டார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் சென்றனர்.

Next Story