மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி 31 பேருக்கு நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் கார்த்திகா வழங்கினார்


மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி 31 பேருக்கு நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் கார்த்திகா வழங்கினார்
x
தினத்தந்தி 4 Dec 2020 12:00 PM GMT (Updated: 4 Dec 2020 11:57 AM GMT)

மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி தர்மபுரியில் உள்ள 31 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்த்திகா வழங்கினார்.

தர்மபுரி,

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தர்மபுரியில் உள்ள மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியோருக்கான காப்பகம் ஒன்றில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, பெட்ரோல் ஸ்கூட்டர், மனவளர்ச்சி குன்றிய 22 குழந்தைகளுக்கு உணவூட்டு மானியம் என மொத்தம் 31 பயனாளிகளுக்கு ரூ.2.34 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலன் காக்க பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி, கொரோனா ஊரடங்கு செயல்படுத்தப்பட்ட காலத்தில் 44 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் மருத்துவ பொருட்கள், 500 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் 18 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா நிவாரண நிதியாக 19 ஆயிரத்து 490 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.1 கோடியே 94 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலன் காக்க அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. தகுதியுள்ள பயனாளிகள் இதுபோன்ற நலத்திட்டங்களை பெற்று தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கார்த்திகா பேசினார்.

விழாவில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் செண்பகவள்ளி, இளநிலை அலுவலர் முருகேசன், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story