எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டவர்: ரங்கசாமியுடன் தனவேலு திடீர் சந்திப்பு; என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவு?
ரங்கசாமியை எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்ட தனவேலு திடீரென சந்தித்து பேசினார். பாகூர் தொகுதியை குறி வைத்து அவர் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என்பதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரங்கசாமியுடன் சந்திப்பு
புதுவை சட்டசபைக்கான பதவி காலம் நிறைவடைவதையொட்டி விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இதை சந்திக்கும் வகையில் கூட்டணி வியூகம் உள்ளிட்ட முன்னேற்பாடு நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரும் கட்சிகளை முக்கிய பிரமுகர்கள் நாடுவதும் அரங்கேறி வருகிறது.
சனிப்பெயர்ச்சிக்குப் பின் கட்சி மாறும் படலம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. வுடன் சேர்ந்து என்.ஆர். காங்கிரஸ் களம் கண்டது. சமீபத்தில் புதிய கட்சி அலுவலக திறப்பு விழாவின்போது கருத்து தெரிவித்த ரங்கசாமி பழைய கூட்டணியே தொடரும் என்று தெரிவித்து இருந்தார்.
ஆனாலும் பல்வேறு தொகுதிகளில் சவால் விடும் வகையில் பலம் பொருந்தியவர்கள் இருப்பதால் அவர்களை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என கருதி தனித்துப் போட்டியிடலாமா? என்பது குறித்து தனது கட்சி நிர்வாகிகளுடன் ரங்கசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
திடீர் சந்திப்பு
இந்தநிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.வான தனவேலுவுக்கும், கட்சி தலைமைக்கும் இடையே சர்ச்சை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சபாநாயகரால் கடந்த ஆண்டு தனவேலு எம்.எல்.ஏ.வின் பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து தீவிர அரசியலில் இருந்து தனவேலு ஒதுங்கி இருந்தார்.
தற்போது தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் நேரு வீதியில் உள்ள கடை ஒன்றில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவரான ரங்கசாமியை தனவேலு நேற்று திடீரென சந்தித்துப் பேசினார். அப்போது அவர் ரங்கசாமிக்கு சால்வை அணிவித்தார்.
கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தனவேலு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். 2016 சட்டமன்ற தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததால் அதிருப்தி அடைந்த அவர் அப்போது காங்கிரஸ் கட்சிக்கு தாவினார்.
தற்போது என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் திரும்ப தனவேலு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாகவே அவர் ரங்கசாமியை சந்தித்ததாக கூறப்படுகிறது.
தனவேலு குறி வைத்துள்ள பாகூர் தொகுதியில் ஏற்கனவே என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரான தியாகராஜன், முன்னாள் எம்.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story