போடி சட்டமன்ற தொகுதியில் 8 இடங்களில் ‘மினி கிளினிக்' - துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்


போடி சட்டமன்ற தொகுதியில் 8 இடங்களில் ‘மினி கிளினிக் - துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 18 Dec 2020 10:13 PM IST (Updated: 18 Dec 2020 10:13 PM IST)
t-max-icont-min-icon

போடி சட்டமன்ற தொகுதியில் 8 இடங்களில் ‘மினி கிளினிக்'கை, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

தேனி,

தமிழகத்தில் கிராமப்புற மக்கள் எளிதில் மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அம்மா ‘மினி கிளினிக்' (சிறு மருத்துவமனை) திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி தேனி மாவட்டத்தில் போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொட்டிபுரம், பழனிசெட்டிபட்டி, அம்பாசமுத்திரம், போ.அம்மாபட்டி, போடிமெட்டு, கூழையனூர், துரைராஜபுரம், உப்புக்கோட்டை மற்றும் ஆண்டப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேக்கம்பட்டி, மகாராஜமெட்டு, ரெங்கசமுத்திரம், கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோகிலாபுரம், சீப்பாலக்கோட்டை, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊஞ்சாம்பட்டி, கோட்டார்பட்டி, வைகை புதூர் ஆகிய 16 இடங்களில் 'மிளி கிளினிக்' அமைக்கப்பட்டு உள்ளன.

இதில், போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 8 இடங்களில் அமைக்கப்பட்ட 'மினி கிளினிக்' திறப்பு விழா நேற்று நடந்தது. 8 இடங்களுக்கும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று 'மினி கிளினிக்குகளை திறந்து வைத்து, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து, போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோடாங்கிபட்டியில் ரூ.8 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம், ரூ.31 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட கால்நடை மருந்தகம், போ.அம்மாபட்டியில் ரூ.8 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம், போ.மீனாட்சிபுரத்தில் ரூ.31 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட கால்நடை மருந்தகம், சில்லமரத்துப்பட்டியில் ரூ.9 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம், பொட்டிப்புரத்தில் ரூ.9 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம், சிலமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.7 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார செயல்விளக்க பூங்கா, ராசிங்காபுரம், நாகலாபுரம் ஆகிய ஊராட்சி மன்ற அலுவலகங்களில் தலா ரூ.7 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு கருவி ஆகியவற்றை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.

போ.மீனாட்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் அன்னை தெரசா மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் கடனுதவி, பயிர்க்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் கடனுதவி ஆகியவற்றையும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

இந்த விழாக்களில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சையதுகான், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏகாம்பரம், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், போடி ஊராட்சி ஒன்றிய தலைவர் சுதாமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story