விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் தோட்டத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்


விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் தோட்டத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 23 Dec 2020 4:24 AM GMT (Updated: 23 Dec 2020 4:24 AM GMT)

விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் தோட்டத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன.

விக்கிரமசிங்கபுரம்,

விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள அனவன் குடியிருப்பு பகுதியானது, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் தங்களது விளை நிலத்தில் நெல், கரும்பு, தென்னை உள்ளிட்டற்றை பயிரிட்டுள்ளனர்.

அங்குள்ள வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் அவ்வப்போது வெளியேறி விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது.

நெற்பயிர் சேதம்

நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் 5 யானைகள் மற்றும் ஒரு குட்டி யானை கூட்டமாக அங்குள்ள சிங்கபெருமாள் குளத்தின் கரைக்கு வந்தன. அவை அங்கு நின்ற 2 பனை மரங்களை சாய்த்தன. பின்னர் அனவன் குடியிருப்பை சேர்ந்த பாண்டி (வயது 60) என்பவரின் தோட்டத்தில் புகுந்து 2 தென்னை மரங்களை சாய்த்தன.

அதன்பிறகு அதே ஊரை சேர்ந்த சொரிமுத்து (60), ராமலிங்கம் (78) ஆகியோரது தோட்டத்துக்குள் புகுந்து அங்கு பயிரிட்டிருந்த நெற்பயிரை சேதப்படுத்தின. இதை பார்த்து தோட்டத்துக்கு இரவு காவலுக்கு சென்ற விவசாயிகள் வேதனை அடைந்தனர். அவர்கள் வெடி வெடித்தும், சத்தம் எழுப்பியும் யானையை காட்டுக்குள் விரட்டினர். காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கல்லிடைக்குறிச்சி

இதேபோல், கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல், மூலச்சி, உலுப்படி பாறை, சிராங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் களக்காடு-முண்டந்்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் அவ்வப்போது விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. கடந்த 10 நாட்களாக பொட்டல் பகுதியில் யானைகள் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதுடன் பனை, தென்னை மரங்களை பிடுங்கி எறிந்து அட்டகாசம் செய்து வருகிறது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அப்பகுதியில் உள்ள 80 அடி கால்வாயில் யானை ஒன்று கடந்து செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பொட்டல் பகுதியில் நெல் நாற்று நடவு செய்து 20 நாட்கள் ஆகிய வயலில் இறங்கி துவம்சம் செய்து உள்ளது. எனவே வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story