பலப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது ஜனதா தளம் (எஸ்) கட்சியை யாராலும் அழிக்க முடியாது - தேவேகவுடா பேட்டி
ஜனதாதளம் (எஸ்) கட்சியை பலப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், கட்சியை அழிக்க யாராலும் முடியாது என்றும் தேவேகவுடா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் உள்ள ஜனதாதளம் (எஸ்) கட்சி அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பெங்களூரு,
ஜனதாதளம் (எஸ்) கட்சி இருக்குமா? அல்லது காணாமல் போய் விடுமா? என்பது குறித்து மாநிலம் முழுவதும் பேச்சுகள் நடக்கிறது. ஒரு மாநில கட்சியை தொடங்கி, அதனை வழி நடத்துவது, கட்டி காப்பாற்றுவது எவ்வளவு சிரமம் என்பது எனக்கு தெரியும். பிரதமர் மோடி காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவதாக தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றபோது, அந்த விழாவில் காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது கூட்டணி நல்ல முறையில் தான் இருந்தது. அதற்கு பின்பு கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்தியது யார்?. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் ‘பி’ டீம் என்று ஜனதாதளம் (எஸ்) கட்சியை ராகுல்காந்தி வாயில் இருந்தே சொல்ல வைத்தது யார்?. இதுபற்றி காங்கிரஸ் தலைவர்கள் தான் சொல்ல வேண்டும். கூட்டணி அரசு அமையும் போது முன்னாள் மத்திய மந்திரி மல்லிகார்ஜுன கார்கேவிடம் முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக் கொள்ளும்படி கூறினேன். அவரும் காங்கிரஸ் மேலிடம் அனுமதி அளித்தால், முதல்-மந்திரியாக பதவி ஏற்பேன் என்று என்னிடம் கூறினார்.
அந்த சந்தர்ப்பத்தில் மல்லிகார்ஜுன கார்கேயை முதல்-மந்திரியாக பதவி ஏற்று கொள்ளும்படி நான் கூறியதை காங்கிரஸ் மேலிடத்தின் கவனத்திற்கே கொண்டு செல்லாமல் விட்டதுடன், எனது கையை பிடித்து கொண்டு (சித்தராமையா), அது எல்லாம் வேண்டாம் என்று கூறியவர் யார்?. எந்த ஒரு நிபந்தனையும் விதிக்காமல் முதல்-மந்திரி பதவியை விட்டு கொடுப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறினார்கள். அதன்பிறகு, மந்திரி பதவி ஒதுக்குவது, குறிப்பிட்ட துறை தான் வேண்டும் என்று கூறியது யார்?.
எனது வாழ்நாள் முழுவதும் போராட்டம் நடத்தியே வந்துள்ளேன். காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகள் பற்றியும் தெரிந்து கொண்டுள்ளேன். ஜனதாதளம் (எஸ்) கட்சியை வளர்க்க தொண்டர்களும், மற்ற தலைவர்களும் இருக்கிறார்கள். 3 மாதங்களாக ஜனதாதளம் (எஸ்) கட்சி பற்றி பல்வேறு செய்திகள் வருகின்றன. இதனை தடுக்க கட்சி சார்பில் சிறப்பான நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கட்சியை காப்பாற்றி, முன்னெடுத்து செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
சித்தராமையாவுக்கும், குமாரசாமிக்கும் நடக்கும் வார்த்தை போர்களை நிற்க வேண்டும். முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவி ஏற்ற பின்பு, நமது கட்சியை நாம் வளர்த்து கொள்ள வேண்டும், அவர்களது கட்சியை அவர்கள் வளர்த்து கொள்வார்கள் என்று கூறி இருந்தார். இன்னும் 3 ஆண்டுகளில் கர்நாடகத்தில் ஜனதாதளம் (எஸ்) கட்சியை வளர்க்க தேவையான நடவடிக்கையை எடுப்பேன். எனது வாழ்நாளில் விவசாயிகளுக்கு ஒரு போதும் அநீதி ஏற்பட விடமாட்டேன். விவசாயிகளுக்காக தொடர்ந்து போராடுவேன். ஜனதாதளம் (எஸ்) கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக வருகிற 7-ந் தேதி அரண்மனை மைதானத்தில் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் மாநிலம் முழுவதும் கட்சியின் பிரமுகர்கள், தொண்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். சங்கராந்தியில் இருந்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் முழு வீச்சில் ஈடுபட உள்ளார். ஜனதாதளம் (எஸ்) கட்சியை பலப்படுத்த சில பிரிவுகளுக்கு புதிதாக தலைவர்கள் நியமிக்கவும், ஒருங்கிணைப்பு குழு அமைக்கவும் முடிவு செய்துள்ளேன். தேர்தலில் வெற்றி, தோல்வி ஏற்படுவது உண்டு. அதை வைத்து கொண்டே ஆட்டம் போடக்கூடாது. ஜனதாதளம் (எஸ்) கட்சியை அழிக்க நினைக்கும் முயற்சி ஒரு போதும் வெற்றி பெறாது. கட்சியை யாராலும் அழிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story