அரசின் முடிவில் மாற்றம் எதுவும் இல்லை; வருகிற 1-ந் தேதி முதல் கர்நாடகத்தில் பள்ளிகள் திறக்கப்படும்; முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு


கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா
x
கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா
தினத்தந்தி 29 Dec 2020 4:46 AM IST (Updated: 29 Dec 2020 4:46 AM IST)
t-max-icont-min-icon

அரசின் முடிவில் மாற்றம் எதுவும் இல்லை என்றும், கர்நாடகத்தில் திட்டமிட்டப்படி வருகிற 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார்.

கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக நடப்பு ஆண்டில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை.

புதிய வகை கொரோனா
கல்வி ஆண்டே தொடங்கவில்லை. தற்போது மாநிலத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. ஏற்கனவே டிகிரி கல்லூரிகள் உள்பட அனைத்து வகையான கல்லூரிகளும் திறக்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில் கர்நாடகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பி.யூ. கல்லூரி ஜனவரி 1-ந் தேதி திறக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா ஏற்கனவே அறிவித்தார்.

இந்த நிலையில் இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அந்த நாட்டில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கர்நாடகத்திற்கு வந்துள்ளனர். அவர்களை கண்டறிந்து கர்நாடக அரசின் சுகாதாரத்துறை, ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்துள்ளது. அவர்களில் 15 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை தாக்கியுள்ள அந்த வைரஸ், புதிய வகை கொரோனாவா? என்பதை கண்டறியும் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

கிராம பஞ்சாயத்துகள்
ஒருவேளை அது புதிய வகை கொரோனாவாக இருந்தால், அதனால் கர்நாடகத்தில் மீண்டும் வைரஸ் தொற்று அதிகரிக்கும் சூழல் உள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பள்ளிகள் திறப்பு குறித்து மறு பரிசீலனை செய்யும் மனநிலையில் அரசு இருப்பதாக தகவல் வெளியானது. இதை முதல்-மந்திரி எடியூரப்பா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் படித்தவர்கள் அதிகளவில் போட்டியிட்டுள்ளனர். இந்த தேர்தலில் பா.ஜனதா ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. கிராம பஞ்சாயத்து தேர்தலில் காங்கிரஸ் ஆர்வம் காட்டவில்லை. கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்ந்து எடுக்கப்படும் தலைவர்களுக்கு அதிக அதிகாரம் கொடுப்போம். கிராம பஞ்சாயத்துகளை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்வோம்.

பள்ளிகள் திறக்கப்படும்
கர்நாடகத்தில் வருகிற 1-ந் தேதி பள்ளிகளை திறப்பதாக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை. திட்டமிட்டப்படி வருகிற 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும். இதுகுறித்து இன்றைய (நேற்று) மந்திரிசபை கூட்டத்தில் ஆலோசித்து மீண்டும் ஒரு முறை முடிவு எடுப்போம். இந்த விஷயத்தை பொறுத்தவரையில் எந்த குழப்பமும் இல்லை. கர்நாடகத்தில் உருமாறிய கொரோனா பரவவில்லை. அதை கண்டு பொதுமக்கள் பயப்பட தேவை இல்லை.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story